தந்தையின் வழியில் நற்பணி – கருணைப் பயணம் திட்டத்தின் வாயிலாக 30 குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டிய நவனீத்

 

25th March 2026

தமது தந்தையின் சமூகச் சேவைப் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில், சிலிம் ரிவர் பகுதியைச் சேர்ந்த நவனீத் பிரபாகரன், நோன்புப் பெருநாளை முன்னிட்டு நலிந்த நிலையில் உள்ள 30 குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களையும், 150 பேருக்கு நோன்புக் கஞ்சிப் பொட்டலங்களையும் வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

கிளினிக் மெடிக் கியூ (Klinik Medik Q) நிறுவனத்தின் உரிமையாளரான இவர், எதிர்வரும் நோன்புப் பெருநாள் மகிழ்ச்சியை அனைவரும் சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த உதவித் திட்டத்தை முன்னெடுத்ததாகத் தெரிவித்தார். முன்னாள் ஃபெல்டா துரோலக் குடியேற்றவாசியும், தீவிர சமூகப் பற்றாளருமான தனது தந்தை ந. பிரபாகரன் (75) அவர்களே இத்தகைய நற்பணிகளுக்குத் தனக்கு ஊற்றுக்கண்ணாக விளங்குவதாக நவநீத் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

இந்த அறப்பணி குறித்து அவர் பகிர்கயில், நம்மிடம் உள்ள வாழ்வாதாரத்தை இல்லாதவர்களுடன் பகிர்ந்து கொள்வதால் செல்வம் குறைந்துவிடாது; மாறாக, அது மனநிறைவையும் இறைவனின் அருளையும் பெற்றுத் தரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சிறுவயது முதலே பன்முகத்தன்மை கொண்ட சூழலில் வளர்ந்தவர் என்ற முறையில், நாட்டின் அமைதிக்கும் முன்னேற்றத்திற்கும் இன, மதங்களைக் கடந்த ஒற்றுமையே அடித்தளம் என்று அவர் வலியுறுத்தினார். நவீனமயமாகும் உலகில் எந்தவொரு தரப்பினரும் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக உணரக்கூடாது என்பதில் மலேசியர்களாகிய நாம் உறுதியாக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

முவாலிம் மாவட்ட இஸ்லாமிய சமய அலுவலகத்தின் மூலம் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட்வர்களுக்கு, இந்த உதவிகள் இரண்டு நாட்களாக வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் டாக்டர் ம. லெவினியாவும் கிளினிக் மெடிக் கியூ ஊழியர்களும் நேரில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சவால்கள் நிறைந்த இன்றைய காலகட்டத்தில், மனிதநேயம் மட்டுமே நல்லிணக்கத்தைத் தக்கவைக்கும் என்று நம்பும் நவநீத், எதிர்காலத்திலும் தனது தந்தையின் அடிச்சுவட்டைப் பின்பற்றி இத்தகைய மக்கள் நலப்பணிகளைத் தொய்வின்றித் தொடரப்போவதாக உறுதிப்படத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *