மலேசிய இந்திய உணவகங்களுக்கு எதிரான மற்றுமொரு பாரபட்சம்: பிரிமாஸ் கண்டனம்

25th March 2026

மலேசிய இந்திய உணவகங்கள் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதில் தொடர்ந்து பாரபட்சமான நடைமுறைகளை எதிர்கொண்டு வருவதாக மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கம் (PRIMAS) தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளது.

தற்போது இந்திய உணவக உரிமையாளர்களுக்குப் புதிய வெளிநாட்டு ஊழியர்களுக்கான அனுமதியோ அல்லது மாற்று ஊழியர்களுக்கான (GANTIAN) அனுமதியோ வழங்கப்படுவதில்லை என்று அந்தச் சங்கத்தின் தலைவர் டத்தோ ஜே. கோவிந்தசாமி (சுரேஷ்) சுட்டிக்காட்டியுள்ளார். அதே வேளையில், பிற இனத்தவர்களால் நடத்தப்படும் உணவகங்களுக்கு மட்டும் இத்தகைய அனுமதிகள் தடையின்றி வழங்கப்படுவது இந்திய உணவகத் துறையைத் திட்டமிட்டுப் புறக்கணிப்பதைக் காட்டுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளும் தோல்வியிலேயே முடிவதாகப் பிரிமாஸ் அறிக்கை கூறுகிறது. குறிப்பாக, OSC இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கும்போது நேர்காணலுக்கான காலியிடங்கள் (slots) கிடைப்பதில்லை என்றும், நேரடியாகச் சென்று முறையிட்டாலும் அவை ஏற்கப்படுவதில்லை என்றும் சங்கத்தின் உறுப்பினர்கள் புகார் அளித்துள்ளனர். இதனால், உரிமையாளர்கள் தங்கள் விண்ணப்பங்களை முன்னெடுத்துச் செல்ல எந்தவொரு தெளிவான வழியும் இன்றித் தவிப்பதாக அந்த அறிக்கை விளக்குகிறது.

நாடு தழுவிய அளவில் நிலவும் இந்தக் கடுமையான ஊழியர் பற்றாக்குறை, இந்திய உணவகங்களின் அன்றாடச் செயல்பாடுகளை முடக்கி, வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சேவையை வழங்குவதில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு உடனடித் தீர்வு காணப்படாவிட்டால், உணவகங்களை மட்டும் சார்ந்திருக்காமல், அதனைச் சார்ந்திருக்கும் விநியோகிப்பாளர்கள், போக்குவரத்துத் துறையினர் ஆகியோரின் வருமானத்திலும் இது பெரும் சரிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தகைய சவால்கள் காரணமாகத் தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்கள் இத்துறையை விட்டு விலகும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த நிலையை அரசாங்கம் விரைந்து சீர்செய்யத் தவறினால், அது பாரதூரமான சமூகச் சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்றும் பிரிமாஸ் எச்சரித்துள்ளது. குறிப்பாக, வேலைவாய்ப்பின்மை, பொருளாதார நெருக்கடி காரணமாக இளைஞர்கள் கேங்க்ஸ்டரிசம், போதைப்பொருள் புழக்கம், திருட்டு, சட்டவிரோதக் கடனுதவி போன்ற குற்றச் செயல்களில் ஈர்க்கப்படும் அபாயம் உள்ளது.

எனவே, வெளிநாட்டு ஊழியர் அனுமதி வழங்கும் நடைமுறையை அரசாங்கம் உடனடியாக மறுபரிசீலனை செய்து, இனப்பாகுபாடின்றி நேர்மையான முறையில் செயல்படுத்த வேண்டும் என்று அந்தச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *