53-வது ஆண்டு விளையாட்டு விழா – புக்கிட் ஜாலில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அசத்தல்

புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கில் இன்று புக்கிட் ஜாலில் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் 53-வது ஆண்டு விளையாட்டுப் போட்டி மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாணவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் அமைந்த இந்த விழாவைச் செப்பூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

தொடக்கவுரையாற்றிய தெரெசா கோக், புக்கிட் ஜலில் தமிழ்ப்பள்ளியின் முக்கியத்துவத்தை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

“இந்தப் பள்ளி வெறும் கல்விக்கூடம் மட்டுமல்ல; இந்தப் பகுதியில் நான்கு தலைமுறைகளாக வாழ்ந்து வரும் இந்தியச் சமூகத்தின் வரலாற்றுச் சான்றாக இது நிமிர்ந்து நிற்கிறது,” என்று அவர் புகழாரம் சூட்டினார்.

மேலும், இப்பள்ளிக்குத் தனது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், இந்த விளையாட்டு விழா நடைபெற்ற தேசிய விளையாட்டரங்கின் வாடகைத் தொகையான 3,000 ரிங்கிட்டை தனது அலுவலகமே முழுமையாக ஏற்கும் என்றும் அவர் அறிவித்தார்.

பல்வேறு ஓட்டப்பந்தயங்களிலும் தடகளப் போட்டிகளிலும் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்தப் போட்டிகளில் அதிகப் பதக்கங்களைக் குவித்து செல்வேந்திரன் விஜயகுமாரன் சிறந்த விளையாட்டு வீரராக மகுடம் சூடினார். தாஷாலினி குமரேசன் சிறந்த விளையாட்டு வீராங்கனையாக முத்திரை பதித்தார். இல்லங்களுக்கு இடையிலான புள்ளிகள் அடிப்படையில், மஞ்சள் இல்லம் முதலிடத்தைப் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது. நீலம் மற்றும் சிவப்பு இல்லங்கள் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பெற்றன.

பள்ளியின் தலைமையாசிரியர் ராமச்சந்திரன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் அருள்மொழி வரதராஜு ஆகியோர், இவ்விழா வெற்றிபெற நிதியுதவியும் பொருளுதவியும் வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *