பந்திங் சட்ட மன்ற மக்கள் சேவை மையத்தின் நோன்புப் பெருநாள் ஜோம் ஷோப்பிங் பற்றுச்சீட்டுகளை 650 பேர் பெற்றனர்.

பந்திங், மார்ச் 10 –

பந்திங் சட்டமன்ற மக்கள் சேவை மையத்தின் ஏற்பாட்டில் இன்று காலை எக்கோன் சேவ் பேரங்காடி வளாகத்தில் நடைபெற்ற ஹரிராயா நோன்புப் பெருநாள் “ஜோம் ஷோப்பிங்” நிகழ்ச்சியில் 200 ரிங்கிட் மதிப்புள்ள பற்றுச்சீட்டுகள் 650 பேருக்கு வழங்கப்பட்டன.

பற்றுச்சீட்டுகளை பெற்றவர்கள் பின்னர் பேரங்காடியில் தங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வாங்கிக் கொண்டதாக, பற்றுச்சீட்டுகளை விநியோகித்த அதன் உயர் அதிகாரி கண்மணி பெரியண்ணன் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமானின் துணைவியார் திருமதி மகேஸ்வரி கலந்து கொண்டார். அவர், பற்றுச்சீட்டுகளை பெற்றவர்களுக்கு பேரங்காடியில் தேவையான உணவுப் பொருட்களை தேர்வு செய்து வழங்க உதவினார்.

தகுதி பெற்ற, வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்த ஹரிராயா நோன்புப் பெருநாள் “ஜோம் ஷோப்பிங்” பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாகவும், சட்டமன்ற உறுப்பினர்களின் துணைவியர்கள் வழிநடத்தும் பெகாவானிஸ் அமைப்பின் உறுப்பினருமான திருமதி மகேஸ்வரி அலை ஒளியிடம் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பந்திங் சட்டமன்ற மக்கள் சேவை மையத்தின் உதவி அதிகாரிகள், பந்திங் இந்திய சமூகத் தலைவர் சாமிதுரை, யூபேன் துணை இயக்குநர் புவான் ரஹாயு அலி, கிராமத் தலைவர்கள் மற்றும் கோலலங்காட் நகராண்மைக் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *