இசை முரசு இளவரசு நெடுமாறனின் 50 ஆண்டுகால இசைப்பயணக் கொண்டாட்டம் – பெட்டாலிங் ஜெயாவில் பிரம்மாண்ட இசை விழா

பெட்டாலிங் ஜெயா, பிப் 26 –
மலேசியத் தமிழ் இசைத்துறையில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ள ‘இசை முரசு’ இளவரசு நெடுமாறனின் 50 ஆண்டுகால இசைப்பயணத்தைப் போற்றும் வகையில் Vaigarai Studios நிறுவனம் பெருமையுடன் ஒரு பிரம்மாண்ட இசை விருந்தை நடத்துகிறது.
கடந்த ஐந்து தசாப்தங்களாக 800-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்து, தனது தனித்துவமான பாணியால் ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்துள்ள இளவரசு நெடுமாறன், 1995-ஆம் ஆண்டு ‘விடியல்’ எனும் தனது முதல் இசைத் தொகுப்பின் மூலம் இசைப் பயணத்தைத் தொடங்கினார். அதன் பின்னர் பக்திப் பாடல்கள், மெல்லிசைப் பாடல்கள், மேடை நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் பல சாதனைகளைப் பதிவு செய்துள்ளார்.
இந்த 50 ஆண்டுகால இசைப் பயணத்தை கொண்டாடும் விழா, மார்ச் 1, 2026 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை Auditorium Tan Sri Jeffrey Cheah அரங்கில் நடைபெறவுள்ளது. அனைவருக்கும் இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், குடும்பத்துடன் கலந்து கொள்ள பொதுமக்கள் அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.
இவ்விசை விழாவில் தமிழகம் மற்றும் மலேசியாவைச் சேர்ந்த முன்னணி கலைஞர்கள் பங்கேற்கின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த கலைமாமணி T. L. Maharajan மற்றும் ‘படையப்பா ஸ்ரீராம்’ என அழைக்கப்படும் Palakkad Sreeram ஆகியோர் சிறப்புப் பாடகர்களாக மேடையேறவுள்ளனர்.
மலேசியக் கலைஞர்களான பிரித்தா பிரசாத், அல்லிமலர் மனோகரன், துருவன் மாரியப்பன், சகிலா இளவரசு உள்ளிட்ட 12 பேர் கொண்ட இசைக் குழுவினர் பின்னணி இசையை வழங்கவுள்ளனர்.
இவ்விழாவின் முக்கிய அம்சமாக, இளவரசு நெடுமாறன் தாமே மேடையில் தோன்றி, பாடல்கள் உருவான பின்னணிக் கதைகள், உள்ளூர் கவிஞர்களின் வரிகள் மற்றும் இசை உருவாக்கத்தின் அனுபவங்களை பகிரவுள்ளார். மேலும் சில பாடல்களுக்கு நடன நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.
நமது நாட்டிலும் திரைப்படப் பாடல்களுக்கு நிகராக உயர்தர இசைப்பாடல்களை உருவாக்க முடியும் என்பதை வெளிப்படுத்தும் நோக்கில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். தமிழகக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் ஆதரவினைப் போலவே, உள்ளூர் கலைஞர்களுக்கும் பொதுமக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
“இசை முரசு ஒலிக்கக் காத்திருக்கிறது உங்கள் செவிகளுக்காக… வாருங்கள், இளவரசுவின் இசை இராஜாங்கத்தில் நாமும் பங்கேற்போம்!” என்ற அழைப்புடன், மலேசியத் தமிழ் இசை வரலாற்றில் மறக்க முடியாத தருணமாக அமையவுள்ள இந்த விழாவில் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.















