தேதி: 21 பிப்ரவரி 2026
இடம்: கோலாலம்பூர்

மலேசிய பிரதமர் Anwar Ibrahim (PMX), சிங்கப்பூர் பிரதமர் Lawrence Wong அவர்களை சிறப்பு உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக கோலாலம்பூரில் அமைந்துள்ள Seri Negara மாளிகையில் வரவேற்று விருந்தளித்தார்.
நூற்றாண்டைக் கடந்த வரலாற்றுப் பெருமை மிக்க இம்மாளிகை, 1948ஆம் ஆண்டின் மலாயா கூட்டாட்சி ஒப்பந்தமும் 1957ஆம் ஆண்டின் சுதந்திர ஒப்பந்தமும் கையெழுத்தான வரலாற்றுச் சான்றிடமாக விளங்குகிறது. இவ்வரலாற்றுப் பின்னணியில் நடைபெற்ற இன்றைய சந்திப்பு, இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் முக்கியத்துவம் பெற்றதாகக் கருதப்படுகிறது.
கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் நீடித்த இந்தச் சந்திப்பின் போது, Seri Negara மாளிகையின் வரலாறும் அதன் பாதுகாப்பு மற்றும் புதுப்பிப்பு பணிகளும் குறித்து விரிவான விளக்கமளிக்கப்பட்டது. இப்பணிகள் Warisan Kuala Lumpur முன்னெடுப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
பின்னர், இரு தலைவர்களும் ரமலான் நோன்பு திறப்பு நிகழ்வில் (இப்தார்) இணைந்து கொண்டதுடன், இரவு உணவின்போது தனிப்பட்ட சந்திப்பையும் நடத்தினர். அச்சந்திப்பில், மலேசியா–சிங்கப்பூர் உறவை மேலும் உறுதிப்படுத்துவது, இருதரப்பு நிலுவைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவது மற்றும் பல்துறை ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
சிங்கப்பூர் பிரதமரின் இவ்விஜயம், இரு நாடுகளுக்கிடையேயான நீண்டநாள் நட்புறவின் வெளிப்பாடாகவும், தலைவர்களுக்கிடையேயான தனிப்பட்ட உறவை வலுப்படுத்துவதாகவும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

ரமலான் மாதத்தின் ஆன்மீகச் சூழலில் நடைபெற்ற இந்த உயர்மட்ட சந்திப்பு, மலேசியா மற்றும் சிங்கப்பூர் மக்களுக்கு நீடித்த ஒற்றுமை, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் செழிப்பை உருவாக்கும் என்ற நம்பிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.















