சிலாங்கூர் எஃப் சி ரசிகர்கள் தங்களின் நன்னடத்தையும் ஒழுக்கத்தையும் பேண வேண்டும்- சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா கருத்து 

ஷா ஆலாம், பிப் 16-

விளையாட்டரங்கிற்கு உள்ளேயும் வெளியேயும் ஆதரவாளர்கள் தங்கள் நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் பேணுமாறு மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அறிவுறுத்தியுள்ளார்.

 

மெர்டேக்கா அரங்கில் நடைபெற்ற ‘ஜெமிலாங்: செலங்கூர் காற்பந்து பயணத்தின் வரலாறு’ எனும் நூலின் வெளியீட்டு விழாவில் அவர் இதனைத் தெரிவித்தார்.

 

போதைப்பொருள் பயன்பாடு ஒழுக்கத்தையும் சிந்தனையையும் சீரழிக்கும் என்பதால், ஆதரவாளர்கள் அதனை முற்றாகத் தவிர்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

 

காற்பந்து மீதான ஆர்வம் என்பது விவேகத்துடனும், மாநிலத்தின் கண்ணியத்தைக் காக்கும் வகையிலும் இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

 

தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்த விரும்புவோர், வன்முறையில் ஈடுபடாமல் சரியான மற்றும் பண்பான வழிகளைப் பின்பற்ற வேண்டும் என்று சுல்தான் சுட்டிக்காட்டினார்.

 

ஆதரவாளர்களின் ஒவ்வொரு செயலும் அவர்கள் சார்ந்திருக்கும் அணியின் பிம்பத்தையே பிரதிபலிக்கும் என்பதை அவர் நினைவூட்டினார்.

 

சமீபத்தில் கோல திரங்கானுவில் செலங்கூர் எஃப்சி ஆதரவாளர்கள் சிலர் சுடரொளி (suar) கொளுத்திய சம்பவம் குறித்து சுல்தான் தனது ஆழந்த வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தினார்.

 

ரவுடித்தனம் மற்றும் குண்டர் கும்பல் கலாச்சாரம் போன்ற எவ்வித ஒழுக்கக்கேடான நடவடிக்கைகளையும் தாம் ஒருபோதும் ஏற்பதில்லை என்று அவர் உறுதிபடக் கூறினார்.

 

இந்தச் சம்பவத்தின் சூத்திரதாரிகளை உடனடியாக அடையாளம் கண்டு, அவர்களுக்கு சட்டத்தின்படி அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று அவர் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

 

குற்றவாளிகளுக்குத் தக்க தண்டனை வழங்குவதன் மூலமே இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க முடியும் என அவர் கருதினார்.

 

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ஆதரவாளர்கள் மைதானத்திற்குள் நுழைய வாழ்நாள் தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் சுல்தான் பரிந்துரைத்தார்.

 

விளையாட்டு என்பது ஒற்றுமைக்கான பாலமாக இருக்க வேண்டுமே தவிர, குழப்பத்திற்கான களமாக மாறக்கூடாது என்பதை அவர் இதன்மூலம் தெளிவுபடுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *