பூச்சோங், 06-02-2026

பூச்சோங் தமிழ் பள்ளிக்கூடம் வளாகத்தில் சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் அருமையான நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் ஆசிரியர் சந்திரலேகா அவர்கள் அன்புடன் அழைப்பு விடுத்ததன் பேரில், சமூக நல மையத் தலைவர் ஜி. பிரான்சிஸ் சிவா அவர்கள் மற்றும் அவரது குழுவினர் பள்ளிக்குச் சென்றனர்.
வருகை தந்த விருந்தினர்களை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன், விருந்தினர்களுக்கு பணிவுடன் காலை உணவு வழங்கப்பட்டது. அதன் பின்னர், நான்காம் ஆண்டு மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவம் குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு மூன்றாம் ஆண்டு மாணவர்களாக இருந்த இம்மாணவர்கள், தங்களது சொந்த முயற்சியால் கைவினைப் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து நிதி திரட்டியுள்ளனர். சேகரிக்கப்பட்ட நிதியின் மூலம் சமூக நல மையத்திற்குத் தேவையான சில மின்சாரப் பொருட்கள் வாங்கி வழங்கப்பட்டதுடன், கூடுதலாக RM800.00 பணமும் மையத்தின் இயக்கத்திற்காக நேரடியாக ஒப்படைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உரையாற்றிய தலைவர் ஜி. பிரான்சிஸ் சிவா அவர்கள், மாணவர்களின் சமூகப்பணி உணர்வை பாராட்டி, “இளம் வயதிலேயே சமூக நலத்திற்காக சிந்தித்து செயல்படும் இந்த மாணவர்கள் எதிர்காலத்தின் நல்ல தலைவர்களாக உருவாகுவார்கள்” என்று தெரிவித்தார். மேலும், இந்த முயற்சியில் ஈடுபட்ட அனைத்து மாணவர்களுக்கும் அவர் மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
அதேவேளை, பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி சிவகாமி அவர்களுக்கும், நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்த ஆசிரியர்கள் மற்றும் ஏற்பாட்டுக் குழுவினருக்கும் அவர் நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்.
மாணவர்களின் சமூகப் பொறுப்பு உணர்வை வளர்க்கும் இத்தகைய முயற்சிகள் கல்வி நிறுவனங்களின் முக்கியப் பங்கினை வெளிப்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சி இறுதியில் அனைவரும் ஒன்றிணைந்து நல்வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டு நிகழ்ச்சி நிறைவுற்றது.















