தேதி: 15 பிப்ரவரி 2026
மென்டகாப், பஹாங்:

கோலாலம்பூர்–குவாந்தான் சாலை (KM134) பகுதியில், தாமான் துவாலாங் இந்தா அருகே அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் திருமணமான தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை அதிகாலை சுமார் 12.55 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில், 34 மற்றும் 35 வயதுடைய கணவன்–மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். இவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக Hospital Sultan Haji Ahmad Shah (HoSHAS) மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்த விபத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் 28 வயதுடைய ஓட்டுநர் Porsche Cayenne வகை SUV வாகனத்தை ஓட்டி வந்ததாகவும், அவர் மதுபானம் அருந்திய நிலையில் இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் அவர் கையில் காயம் அடைந்துள்ளார்.
அவரிடமிருந்து இரத்த மற்றும் சிறுநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நச்சு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. சந்தேகநபர் பிப்ரவரி 17 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக 1987ஆம் ஆண்டின் சாலைப் போக்குவரத்து சட்டம் பிரிவு 44(1)(b) கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்தை நேரில் கண்டவர்கள் அல்லது தகவல் கொண்டவர்கள் உடனடியாக அருகிலுள்ள போலீஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த தம்பதியினரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவிக்கப்படுகின்றன. அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.















