கோலாலம்பூர், 08 பிப்ரவரி 2026

கோலாலம்பூரில் சட்டவிரோத வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக பேரணி நடத்த முயன்றதாகக் கூறப்படும் மத போதகர் சம்ரி வினோத் சனிக்கிழமை இரவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவருடன் மேலும் சில நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த கைது நடவடிக்கையை உறுதிப்படுத்திய கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்துக் ஃபாதில் மார்சஸ், சம்பவம் தொடர்பாக விரிவான விளக்கம் அளிக்கும் வகையில் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்படும் என அறிவித்தார்.
இரவு மணி 9.00க்கு திட்டமிடப்பட்டிருந்த அந்த பேரணி இறுதியில் நடத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார். பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, பேரணிக்கு முன்கூட்டியே போலீஸார் அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பேரணி நடைபெற இருந்த பகுதியைச் சுற்றியுள்ள வளாகங்களின் உரிமையாளர்கள், பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள், அத்துடன் பொதுச் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை ஆகியவற்றை ஆராய்ந்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக போலீஸ் தரப்பு விளக்கமளித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சட்டப்படி தேவையான மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.
பொது அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதே போலீஸாரின் முதன்மை நோக்கம் எனவும், சட்டவிரோதமாக நடத்தப்படும் எந்தவொரு நடவடிக்கையையும் அனுமதிக்க முடியாது எனவும் கோலாலம்பூர் போலீஸ் தலைவர் வலியுறுத்தினார்.















