பி.ஏ.சி மற்றும் எம்.ஏ.சி.சி அறிக்கைகளின் எதிரொலி; எச்.ஆர்.டி கோர்ப் தனது மூன்று மூத்த அதிகாரிகளை இடைநீக்கம் செய்தது.
கோலாலம்பூர், பிப் 6-

பொதுக் கணக்குக் குழு (PAC), தலைமைத் தணிக்கையாளர் மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) ஆகியவற்றின் அறிக்கைகளைத் தொடர்ந்து, HRD Corp தனது உயர்மட்ட நிர்வாகத்தைச் சேர்ந்த மூன்று அதிகாரிகளைப் பணியிடை நீக்கம் செய்துள்ளது.
அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனத்தின் பயன்படுத்தப்படாத வரிகளின் மேலாண்மை, Menara Ikhlas கையகப்படுத்தல் மற்றும் எச்ஆர்டி கோர்ப்பின் பங்கு முதலீட்டு மேலாண்மை ஆகியவற்றுடன் தொடர்புடையது என்றும் எச்ஆர்டி கோர்ப் குறிப்பிட்டுள்ளது.
பயன்படுத்தப்படாத வரிப்பணத்தை நிர்வகிப்பதில் ஏற்பட்ட குளறுபடிகள், புத்ராஜெயாவில் உள்ள மெனாரா இக்லாஸ் கட்டிடத்தை வாங்கியதில் நிலவும் மர்மங்கள் மற்றும் விதிமுறை மீறல்கள், நிறுவனத்தின் ஈக்விட்டி முதலீடுகளை (Equity Investment) கையாண்ட விதம், RM14 மில்லியன் மதிப்பிலான புதிய தகவல் தொழில்நுட்பத் திட்டம், சோதனைகளில் மூன்று முறை தோல்வியடைந்ததோடு, 4 ஆண்டுகளுக்கு மேலாகத் தாமதமானது போன்றவற்றில் நடந்த முறைகேடு என்று, HRD Corp தலைமைச் செயல் அதிகாரி டத்தோ முகமட் ஷமீர் அப்துல் அஜிஸ் கூறினார்.
“மனிதவளத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர். ரமணன், நிர்வாகத்தில் உயர் நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையைக் கோரியுள்ளார். அவரது உத்தரவுக்கு இணங்கவே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.”
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மூன்று அதிகாரிகளின் பெயர்களை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இருப்பினும், ஆவணங்கள், நிதிப் பதிவுகள் மற்றும் கூட்டங்களின் முடிவுகள் குறித்துத் தீவிரமான உள்நாட்டு விசாரணை (Internal Investigation) நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டத்தோ ஷமீர் பொறுப்பேற்ற முதல் வாரத்திலேயே, நிலுவையில் இருந்த முதலீட்டுத் தொகையிலிருந்து 18 சதவீதத்தை (RM151.8 மில்லியன்) மீட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இனிவரும் காலங்களில், பயிற்சித் திட்டங்களுக்கு அனுமதி கிடைத்த 21 நாட்கள் முதல் 3 மாதங்களுக்குள் மட்டுமே பயிற்சிகளை நடத்த வேண்டும் என புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.















