பாத்தேக் ஏர் மற்றும் மலேசியா சுற்றுலா துறை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது 

பாத்தேக் ஏர் மற்றும் மலேசியா சுற்றுலா துறை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது

கோலாலம்பூர் பிப் 5

2026 மலேசியாவிற்கு வருகை புரியும் பிரச்சாரத்தை வலுப்படுத்தும் வகையில் முன்னணி விமான நிறுவனமான பாத்தேக் ஏர் மற்றும் மலேசியா சுற்றுலாத்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது.

மலேசியாவை ஒரு பிரதான பயன மையமாக விளம்பரப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் ஒரு முக்கிய மைல்கல்லாக இந்த ஒப்பந்தம் அமைகிறது.

அண்மையில் தலைநகரில் சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் முன்னிலையில் நடந்த இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பாத்தேக் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராம மூர்த்தி மற்றும் மலேசிய சுற்றுலாத்துறை தலைமை இயக்குனர் முகமட் அமிருல் ரிசால் ஆகியோர் பார்வையிட்டனர்.

வலிமையான தொடர்பின் வழி மலேசிய சுற்றுலா துறையை மேம்படுத்த பாத்தேக் ஏர் இலக்கை கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் வழி மலேசிய சுற்றுலாத் துறையின் விளம்பர திட்டங்களை ஆதரிக்க பாத்தேக் ஏர் அணுக்கமான ஒத்துழைப்பை வழங்கவிருக்கிறது.

வர்த்தக கருத்தரங்குகள், அறிமுகப் பயணங்கள் மற்றும் முக்கிய அனைத்துலக சந்தைகளில் ஊடகங்களுடன் சந்திப்பு போன்றவற்றில் பாத்தேக் ஏர் முக்கிய பங்காற்றவிருக்கிறது.

இதனிடையே இந்த பங்காளித்துவ ஒப்பந்தத்தின் வழி தேசிய சுற்றுலாத்துறை நோக்கங்களை ஆதரிக்க தன்னால் இயன்ற ஒத்துழைப்பை தமது நிறுவனம் வழங்கும் என பாத்தேக் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறினார்.

மலேசிய சுற்றுலாத் துறையுடனான இந்த அர்த்தமுள்ள ஒத்துழைப்பு நாட்டின் சுற்றுலாத் துறையை மேலும் வலுப்படுத்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மலேசியாவின் பன்முகத்தன்மையான கவரும் மையங்கள், வளமான கலாச்சாரம் போன்றவற்றை பயண வர்த்தக பங்காளிகள் மற்றும் ஊடகப் பிரதிநிதிகள் முதலில் தெரிந்து கொள்ள பாத்தேக் ஏர் தனது பங்கை ஆற்றும் என்றார் அவர்.

2026 மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டிற்கான பிரச்சாரத்தை ஆதரிக்க தனது பங்கு குறித்து பாத்தேக் ஏர் பெருமை கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2025 ஆம் ஆண்டில் இந்தோனேசியா, இந்தியா, தென் கொரியா, ஜப்பான் மற்றும் அரபு சிற்றரசு ஆகிய நாடுகளில் கூட்டு ஒத்துழைப்பின் வழி பாத்தேக் ஏர் வெற்றி கண்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.

இந்நாட்டின் சுற்றுலா வளர்ச்சிக்கு பாத்தேக் ஏர் தொடர்ந்து தனது பங்கை ஆற்றி வரும் என அவர் குறிப்பிட்டார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *