தேதி: 31 ஜனவரி 2026
சென்னை:

‘கடைசி விவசாயி’ திரைப்படத்தில் மேஜிஸ்ட்ரேட் மங்கையர்கரசி என்ற கதாபாத்திரத்தை உயிர்ப்புடன் திரையாக்கிய நடிகை டாக்டர் ரேச்சல் ரெபேக்கா, தமிழ்நாடு அரசு வழங்கிய மாநில திரைப்பட விருதை (சிறந்த துணை நடிகை) முழுமனதோடும் தாழ்மையுடனும் ஏற்றுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த மதிப்புமிக்க அங்கீகாரத்திற்காக தமிழ்நாடு அரசுக்கும், மாநில திரைப்பட குழுவினருக்கும், ‘கடைசி விவசாயி’ படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். என் தாய் மண்ணில் இந்த அங்கீகாரம் கிடைத்தது, வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.
மேலும், ‘கடைசி விவசாயி’ போன்ற உயிரோட்டமுள்ள எதார்த்த படைப்பை உருவாக்க நம்பிக்கை வைத்து முனைந்த விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ், டிரைபல் ஆர்ட்ஸ் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோருக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். மேஜிஸ்ட்ரேட் மங்கையர்கரசி என்ற பாத்திரத்தை தன்னிடம் ஒப்படைத்த இயக்குநர், எழுத்தாளர் எம். மணிகண்டன் அவர்களின் தெளிவான பார்வையும் ஆழ்ந்த சிந்தனையுமே அந்தக் கதாபாத்திரத்தின் வலிமை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தன்னுடன் இணைந்து நடித்த அனைத்து நடிகர்களுக்கும், குறிப்பாக ஒவ்வொரு காட்சியிலும் இயல்பாக வாழ்ந்த நல்லாண்டி ஐயா அவர்களுக்கும், மொத்த படக்குழுவினருக்கும் நன்றியைத் தெரிவித்துள்ள ரேச்சல் ரெபேக்கா, “இந்த விருது என்னுடையது மட்டுமல்ல; எங்கள் அனைவருக்குமானது” என வலியுறுத்தியுள்ளார்.
‘கடைசி விவசாயி’ திரைப்படம் தமிழ்நாடு மாநில அளவில் நான்கு விருதுகளை பெற்றிருப்பது பெருமை அளிப்பதாகக் கூறிய அவர், மாநில விருதுகள் என்பது வியாபார ரீதியான அங்கீகாரம் அல்ல; மக்களின் மனமார்ந்த ஏற்றுக்கொள்ளலின் வெளிப்பாடு எனத் தெரிவித்துள்ளார். “இது என் வாழ்க்கையின் முக்கியமான மைல்கல். மிகுந்த மகிழ்ச்சியுடனும் பொறுப்புணர்வுடனும் இந்த விருதை ஏற்றுக் கொள்கிறேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.
இவ்விழாவில் விருது பெற்றுள்ள மற்ற வெற்றியாளர்களுக்கும் டாக்டர் ரேச்சல் ரெபேக்கா மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
— செய்திகளை முந்தி தருவது
முரசு ரமேஷ்















