கோலாலம்பூர், 30 ஜனவரி 2026

மக்களவையில் இவ்வாரம் நிறைவடைந்த “அரசரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்” குறித்த விவாதங்களில், கல்வி, உட்கட்டமைப்பு மேம்பாடு, மக்களின் சமூக-பொருளாதார நிலை மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு உள்ளிட்ட பல முக்கிய தேசிய விவகாரங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டன.
ஜனவரி 19 அன்று மலேசியாவின் அரசர் சுல்தான் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற 15-ஆவது நாடாளுமன்றத்தின் ஐந்தாம் அமர்வின் முதல் கூட்டத் தொடக்க விழாவை தொடர்ந்து, ஜனவரி 20 முதல் தொடங்கிய இந்த விவாதத்தில், மொத்தம் 150 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் இருந்து மக்களின் குரலை எடுத்துச் சொன்னனர்.
2026–2035 மலேசிய கல்வித் திட்டம் (RPM) தொடர்பான விவாதங்களில், அதன் அமலாக்கம் அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும், குறிப்பாக மாநிலங்கள் மற்றும் கிராமப்புறங்களில் நிலவும் கல்வி உட்கட்டமைப்பு குறைபாடுகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
பட்டாங் சடோங் தொகுதி உறுப்பினர் ரோடியா சாபீ (GPS), ஐந்து வயதில் முன்பள்ளி கல்வி மற்றும் ஆறு வயதில் ஆண்டு ஒன்று (Year One) சேர்க்கை தொடர்பான அரசின் முயற்சிகளை வரவேற்றாலும், கிராமப்புறங்களில் அடிப்படை கல்வி வசதிகள் போதுமானதாக இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் எனக் கூறினார்.
இதுபோலவே, சண்டகான் தொகுதி உறுப்பினர் விவியன் வோங் ஷிர் யீ (PH), பயனுள்ள கற்றல்-கற்பித்தலை உறுதி செய்ய கூடுதல் வகுப்பறைகள் தேவைப்படுவதாக அரசின் கவனத்தை ஈர்த்தார்.
அதேவேளை, நகர்ப்புற வறுமை பிரச்சினை முழுமையான அணுகுமுறையுடன் கையாளப்பட வேண்டும் என்றும், அதற்காக தனி அமைச்சகம் அல்லது மைய ஒருங்கிணைப்பு அமைப்பு அமைக்கப்பட வேண்டும் என்றும் சில உறுப்பினர்கள் பரிந்துரைத்தனர்.
கோம்பாக் தொகுதி உறுப்பினர் டத்தோக் ஸ்ரீ அமிருதின் ஷாரி (PH), குறிப்பிட்ட கவனம் இல்லையெனில் தற்போதைய முயற்சிகள் வறுமையின் அடிப்படை காரணங்களை தீர்க்காமல், அறிகுறிகளை மட்டுமே கையாளும் அபாயம் இருப்பதாக எச்சரித்தார்.
செகிஜாங் தொகுதி உறுப்பினர் டத்தோக் ஸ்ரீ டாக்டர் ஸாலிஹா முஸ்தஃபா (PH), 2036-ஆம் ஆண்டை நோக்கி மலேசியா முதிய சமூகமாக மாறும் சூழலில், ‘சாண்ட்விச் தலைமுறை’ எதிர்கொள்ளும் நிதிச் சுமைகளை கருத்தில் கொண்டு, பொருளாதார உதவிகளை மதிப்பீடு செய்யும் முறைகளை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கூறினார்.
பகோத் தொகுதி உறுப்பினர் தான் ஸ்ரீ முஹ்யித்தீன் யாசின் (PN), அரசின் ஒவ்வொரு கொள்கையிலும் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கல்வி கூறுகள் தெளிவான, அடையக்கூடிய இலக்குகளுடன் இணைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
டிஜிட்டல் பாதுகாப்பு தொடர்பாக, பேகான் தொகுதி உறுப்பினர் டத்தோக் ஸ்ரீ ஷ் மொஹமட் புஸி ஷ் அலி (BN), தகவல் கையாளல் மற்றும் தவறான தகவல் பரவலை கட்டுப்படுத்த செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான கண்காணிப்பு பயன்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என அரசை வலியுறுத்தினார். 2025-ஆம் ஆண்டில் மட்டும் 67,735 டிஜிட்டல் குற்றங்கள் பதிவாகி, RM2.7 பில்லியன் இழப்பு ஏற்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, ஆறு வயதில் ஆண்டு ஒன்று சேரும் குழந்தைகளுக்கான நோயறிதல் சோதனை (diagnostic screening) 2027 கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படாது என பிரதமர் டத்தோக் ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மக்களவையில் அறிவித்தார். அந்த சோதனை குழந்தைகளுக்கு உளவியல் பாதிப்பு ஏற்படுத்துவதோடு, பாகுபாடானதாக இருக்கலாம் என்ற கவலைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
ஆனால், மாணவர்களின் தயார்நிலை கண்காணிப்பு புறக்கணிக்கப்படாது என்றும், அந்த பொறுப்பு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து தொடர்ச்சியான கவனிப்பின் மூலம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மக்களவைத் தலைவர் தான் ஸ்ரீ ஜோஹாரி அப்துல், விவாதங்களில் எழுந்த கேள்விகளுக்கான அமைச்சர்களின் பதில்கள் பிப்ரவரி 4 முதல் 10 வரை நடைபெறும் என அறிவித்தார். மேலும், கூட்டாட்சித் தினம் மற்றும் தைப்பூசம் கொண்டாட்டங்களை முன்னிட்டு, அடுத்த வாரம் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மக்களவை கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.















