தைப்பூசத்தை முன்னிட்டு பத்துமலையில் 1,200-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கொண்ட மருத்துவ முகாம்கள்

தைப்பூசத்தை முன்னிட்டு பத்துமலையில் 1,200-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கொண்ட மருத்துவ முகாம்கள்

பத்துமலை, ஜனவரி 29

தைப்பூசத்திற்கு இன்னும் மூன்று நாட்களே எஞ்சியுள்ள நிலையில், நாளை மறுநாள் நடைபெறவுள்ள வெள்ளி இரத ஊர்வலம் பத்துமலை திருத்தலத்தை நோக்கி புறப்பட உள்ளது.

வெள்ளி இரத ஊர்வலத்துடன் தங்களின் யாத்திரையைத் தொடங்கி, தைப்பூச காலம் முழுவதும் பத்துமலைக்கு வருகை புரியும் லட்சக்கணக்கான பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ஆண்டுதோறும் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானம் விரிவான முதலுதவி மற்றும் மருத்துவ ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, இவ்வாண்டு தைப்பூச விழாவை முன்னிட்டு 1,200-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டிருப்பதுடன், மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையம் (UMMC) முதன்மை மருத்துவ சேவை அமைப்பாக இணைந்து செயல்படவுள்ளதாக, ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் ஒருங்கிணைப்பாளரும், தைப்பூச விழாவின் சுகாதார மற்றும் பாதுகாப்பு பொறுப்பாளருமான டத்தோ டாக்டர் எ.டி. குமரராஜா தெரிவித்தார்.

இவ்வாண்டு தைப்பூச விழாவிற்கு 30 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

மக்களின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் வகையில், சுகாதார அமைச்சின் ஒப்புதலின் கீழ், மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையமும் இம்முறை மருத்துவ முகாமில் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.

“ஒவ்வொரு ஆண்டும் வழங்கும் மருத்துவ ஆதரவைப் போல இவ்வாண்டும் சேவை வழங்குவதாக அவர்கள் உறுதி அளித்திருந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் என்பதன் அடிப்படையில் மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் உதவியை நாடினோம். அதன்படி, அவர்கள் இம்முறை மருத்துவ முகாமில் முதன்மை அமைப்பாக இணைக்கப்பட்டுள்ளனர். இதனுடன், சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் எட்டு அரசாங்க மருத்துவமனைகளும் மருத்துவ சேவையில் இணைக்கப்பட்டுள்ளன. சிலாங்கூர் மாநில செலாயாங் மருத்துவமனை முதன்மை மருத்துவமனையாகவும், அதைச் சுற்றியுள்ள எட்டு மருத்துவமனைகளும் இந்த ஏற்பாட்டில் பங்கேற்கின்றன,” என டத்தோ டாக்டர் எ.டி. குமரராஜா தெரிவித்தார்.

தைப்பூச விழாவின் போது ஏற்படும் கூட்ட நெரிசல் காரணமாக கைத்தொலைபேசி சேவையில் தற்காலிக துண்டிப்புகள் ஏற்பட்டாலும், அவ்வாறான சூழ்நிலைகளிலும் மக்களின் தேவைகளை உணர்ந்து மருத்துவ உதவிகளை வழங்கும் வகையில் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

“சுமார் 80 மணி நேரத்திற்கு எந்தவித தொடர்பு துண்டிப்பும் இல்லாமல், சுகாதார அமைச்சு, மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையம், தீயணைப்பு மற்றும் மீட்பு துறை, போலீஸ் துறை ஆகிய அனைத்துத் தரப்பினருக்கும் இடையே ஒருங்கிணைந்த தொடர்பு அமைப்பு செயல்படும். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, மேல் குகை மற்றும் ஆற்றங்கரை பகுதிகளில் தொலைபேசி சேவை இல்லாத நிலையிலும் முதலுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன,” என அவர் தெரிவித்தார்.

இதனிடையே, தைப்பூச விழாவின் போது பொதுமக்களுக்கு உடனடி மருத்துவ உதவிகளை வழங்க, 15-க்கும் அதிகமான ஆம்புலன்சுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதுடன், ஆலயத்தைச் சுற்றியுள்ள ‘ஹாட்ஸ்பாட்’ எனப்படும் அதிக ஆபத்து கொண்ட 24 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, கடந்த 15 ஆண்டுகளாக தைப்பூச மருத்துவ முகாமில் தன்னார்வலராக சேவையாற்றி வரும் விக்னேஸ்வரன் கோபால் தெரிவித்தார்.

“கே.டி.எம் வளாகத்திலிருந்து தொடங்கி, மேல் குகை, முதன்மை வாசல் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்படும் இந்த மருத்துவ முகாம்கள், ஒவ்வொரு ஆண்டும் அதிகளவில் சுகாதாரச் சிக்கல்கள் ஏற்படும் இடங்களை மையமாகக் கொண்டு செயல்படும்,” என அவர் கூறினார்.

மேலும், முதலுதவி சேவைகளை வழங்க சுகாதார அமைச்சு, மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையம், தீயணைப்பு மற்றும் மீட்புப் படை, மலேசிய பொது பாதுகாப்புத் துறை (JPAM), செம்பிறைச் சங்கம், செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட ஏழு அமைப்புகள் இணைந்து பணியாற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து வெள்ளி இரதம் புறப்பட்டு, மீண்டும் தாய் ஆலயத்தை வந்தடையும் வரையில் இந்த மருத்துவ முகாம்கள் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *