9 மணிநேரம் காரினுள் கிடந்த இரண்டு வயது குழந்தை பரிதாபமாக பலியானது- சிரம்பானில் சோகம்
சிரம்பான், ஜன 28-

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் சிரம்பான், ஜாலான் துங்கு ஹசான் பகுதியில் செவ்வாய்க்கிழமை அன்று காரினுள் மறக்கப்பட்ட நிலையில் இரண்டு வயது குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து மாலை 6:15 மணியளவில் பொதுமக்களிடமிருந்து ‘மெர்ஸ் 999’ (MERS 999) அவசர அழைப்பு வந்ததாக சிரம்பான் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏ.சி.பி அசார் அப்துல் ரஹிம் உறுதிப்படுத்தியுள்ளார்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், அக்குழந்தையின் தாய் அருகில் உள்ள அலுவலகம் ஒன்றில் பணியாற்றுபவர் என்பது தெரியவந்துள்ளது. காலை 8 மணியளவில் பணிக்குச் சென்ற அவர், தனது மகனை பராமரிப்பு மையத்தில் விட மறந்து, காரிலேயே விட்டுச் சென்றுள்ளார்.
மாலை 5 மணியளவில் பணி முடிந்த பிறகு காரின் அருகே சென்ற போதே, குழந்தை சுயநினைவின்றி இருப்பதை அவர் கவனித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட குழந்தை உடனடியாக துங்கு ஜாபார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
எனினும், அங்கு பரிசோதித்த மருத்துவக் குழுவினர் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து, உயிரிழந்த குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக ரெம்பாவ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக 2001-ஆம் ஆண்டு குழந்தைகள் சட்டத்தின் பிரிவு 31(1)(a)-இன் கீழ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைக்கு உதவும் வகையில் உயிரிழந்த குழந்தையின் தாயார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.















