ஹரிமாவ் மலாயா அணியின் ஏழு மரபுவழி வீரர்களுக்கான தடையை உடனடியாக நிறுத்தி வைத்தது ஃபிஃபா (FIFA)
கோலாலம்பூர், ஜன 28-

ஹரிமாவ் மலாயா அணியைச் சேர்ந்த ஏழு வீரர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 12 மாத கால காற்பந்து விளையாட்டிற்கான தடையை உடனடியாக நிறுத்தி வைப்பதாக சர்வதேச காற்பந்து கூட்டமைப்பு (FIFA) உறுதிப்படுத்தியுள்ளது.
விளையாட்டு நடுவர் நீதிமன்றம் (Court of Arbitration for Sport – CAS) வழங்கிய இடைக்கால உத்தரவை கவனத்தில் கொண்டு, ஃபிபா இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
மலேசிய காற்பந்து சங்கம் (FAM) இன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. ஃபிபா அமைப்பின் ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் அமெரிகோ எஸ்பல்லார்காஸ் (Americo Espallargas) கையெழுத்திட்ட அதிகாரப்பூர்வ கடிதத்தையும் மலேசிய காற்பந்து சங்கம் இதனுடன் இணைத்துள்ளது.
தடை நிறுத்தி வைக்கப்பட்ட ஏழு வீரர்கள் பின்வருமாறு; பகுண்டோ கார்சஸ் (Facundo Garcés), ரோட்ரிகோ ஹோல்காடோ (Rodrigo Holgado), இமானோல் மசூகா (Imanol Machuca), ஜோவோ ஃபிகியூரிடோ (João Figueiredo), கேப்ரியல் பால்மெரோ (Gabriel Palmero), ஜான் இராசாபால் (Jon Irazabal), ஹெக்டர் ஹெவெல் (Héctor Hevel)
இந்த வீரர்கள் தாக்கல் செய்த ‘செயல்படுத்தல் நிறுத்திவைப்பு’ (Stay of Execution) விண்ணப்பத்தை விளையாட்டு நடுவர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதையடுத்து, உள்நாட்டு மற்றும் கண்ட அளவிலான அனைத்துப் போட்டிகளிலும் இவர்கள் விளையாட ஃபிபா அனுமதி வழங்கியுள்ளது.
விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் இவர்களது மேல்முறையீடு குறித்து இறுதித் தீர்ப்பு வரும் வரை, இந்த ஏழு வீரர்களும் தொழில்முறை ரீதியிலான அனைத்து காற்பந்து நடவடிக்கைகளிலும் தடையின்றி ஈடுபட முடியும் என்று மலேசிய காற்பந்து சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது















