ஜாலான் பார்லிமன் | ஜனவரி 26

— fotoBERNAMA (2026) HAK CIPTA TERPELIHARA
இலக்கவியல் கண்காணிப்பை வலுப்படுத்த MyIKD உருவாக்கம்
இலக்கவியல் உள்ளடக்கத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பை மேலும் விரிவாகவும் பயனுள்ளதாகவும் வலுப்படுத்தும் நோக்கில் MyIKD (Malaysia Digital Inclusion Index) எனப்படும் மலேசியா இலக்கவியல் உள்ளடக்க குறியீட்டை இலக்கவியல் அமைச்சு உருவாக்கி வருகிறது.
இது குறித்து இன்று ஜாலான் பார்லிமனில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ, MyIKD என்பது வெறும் மையப்படுத்தப்பட்ட தரவுத்தளம் மட்டுமல்ல; நாட்டில் நிலவும் இலக்கவியல் இடைவெளியை துல்லியமாக அளவிடும் முக்கிய கருவியாகவும் செயல்படும் என்று தெரிவித்தார்.
“MyIKD மூலம் மக்களிடையே நிலவும் வசதி வாய்ப்புகள், இணைய அணுகல், டிஜிட்டல் சேவைகளின் மலிவு விலை திறன் போன்ற அம்சங்கள் குறிப்பாக அளவிடப்படும். இந்தத் தரவுகள் எதிர்காலத்தில் அரசாங்கம் இன்னும் இலக்கு நோக்கிய திட்டங்களை வடிவமைக்கவும், இலக்கவியல் இடைவெளியை தொடர்ந்து கண்காணிக்கவும் பெரிதும் உதவும்,” என அவர் கூறினார்.
மேலும், இலக்கவியல் பொருளாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி மற்றும் மேம்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் இலக்கவியல் மயமாக்கல் முயற்சிகள் சமூக சமத்துவமின்மையை அதிகரிக்கக் கூடாது என்பதில் அமைச்சு உறுதியாக இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
இதன் தொடர்ச்சியாக, கொள்கை அமலாக்கங்களில் இலக்கவியல் உள்ளடக்கிய தன்மையை (Digital Inclusivity) ஒரு முக்கிய கொள்கை அடிப்படையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளதாக கோபிந் சிங் டியோ தெரிவித்தார்.
MyIKD உருவாக்கம், மலேசியாவின் இலக்கவியல் வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கும் வகையில் அமைய அரசாங்கம் மேற்கொண்டு வரும் முக்கிய முயற்சிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.















