சிலாங்கூர் மாநில அளவிலான தைப்பூசத் திருவிழா ஒருங்கிணைப்புக் கூட்டம்: மாநில அரசு தீவிர ஏற்பாடு – மாண்புமிகு பாப்பாராய்டு வீரமான் தகவல்

ஷா ஆலம், ஜன 22-
சிலாங்கூர் மாநில அளவிலான தைப்பூசத் திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்து விவாதிப்பதற்கான ஒருங்கிணைப்புக் கூட்டம் இன்று அதிகாரப்பூர்வமாக நடைபெற்றது.
பத்துமலை, கெர்லிங் மற்றும் கோலா சிலாங்கூர் ஆகிய முக்கிய இடங்களில் இத்திருவிழா நடைபெறவுள்ள வேளையில், அதன் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு மேலாண்மை குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது என்று சிலாங்கூர் மாநில மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு பாப்பாராய்டு வீரமான் கூறினார்.
இம்முறை ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் வசதிகளை உறுதி செய்வதே இக்கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என்று அவர் தெரிவித்தார்.
விழாவின் சீரான ஓட்டத்தை உறுதி செய்ய அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை இக்கூட்டம் வலியுறுத்தியது.
இந்த ஆண்டு தைப்பூசக் கொண்டாட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக, சிலாங்கூர் மாநில அரசின் லிமாஸ் (LIMAS) முதற்கட்ட உதவித்தொகைக்கான செக் வழங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது. மாநிலத்திலுள்ள ஆலயங்களின் அடிப்படைத் தேவைகள், மேலாண்மை மற்றும் நலன்களை மேம்படுத்துவதற்காக வழங்கப்படும் இந்த நிதி உதவி, மாநில அரசின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது என்று அவர் கருத்துரைத்தார்.
ஆலயங்களின் சுமையைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், சிலாங்கூர் மாநில நிர்வாகத்தின் அடித்தளமான நல்லிணக்கம், அக்கறை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய கொள்கையைப் பறைசாற்றும் வகையில் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதன் மூலம், மாநிலத்தில் சமய நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும், வழிபாட்டுத் தலங்களின் மேம்பாட்டிற்கு ஆதரவளிக்கவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளது என்று அவர் சொன்னார்.















