மலேசிய உயர்க்கல்வித் திட்டம் (RPTM) 2026–2035: நாட்டின் புதிய கல்வி திசைகாட்டி
கோலாலம்பூர், ஜன 20-

அடுத்த 10 ஆண்டுகளுக்கான நாட்டின் உயர்கல்வித் துறையின் முக்கிய திசைகாட்டியாக ‘மலேசிய உயர்கல்வித் திட்டம் (RPTM) 2026–2035’ நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய மாற்றங்கள், தொழில்துறைத் தேவைகள் மற்றும் நாட்டின் எதிர்கால சவால்களுக்கு ஏற்ப பல்கலைக்கழகங்கள், பாலிடெக்னிக்குகள் மற்றும் சமூகக் கல்லூரிகளின் வளர்ச்சியை வடிவமைக்கும் முதன்மை ஆவணமாக இந்த உத்திமுறைத் திட்டம் அமையும் என்று உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காதிர் தெரிவித்தார்.
வெளிநாட்டு ஆலோசனைகளை எதிர்பார்க்காமல், முழுமையாக உள்நாட்டு நிபுணத்துவம் மற்றும் திறமையாளர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட நாட்டின் முதல் நீண்டகாலக் கல்வித் திட்டம் இதுவாகும் என்று டாக்டர் ஸம்ரி விளக்கினார்.
இத்திட்டம் வெறும் நிர்வாகக் கொள்கை மட்டுமல்லாது, மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்டதும், தேசத்தைக் கட்டியெழுப்பும் நோக்கம் கொண்டதுமான உயர்கல்வித் தளத்தை உருவாக்குவதற்கான அடித்தளமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
“உயர்கல்வி என்பது ஒரு தேசத்தின் மூளை (Brain of the Nation) போன்றது. இந்த நிறுவனம் தனது பங்கைச் செய்யத் தவறினால், நாடு தனது இலக்கை இழந்துவிடும்,” என்று புத்ராஜெயா சர்வதேச மாநாட்டு மையத்தில் (PICC) இன்று நடைபெற்ற உயர்கல்வி அமைச்சின் 2026-ஆம் ஆண்டு புத்தாண்டுச் செய்தியின்போது அவர் உரையாற்றினார்.
மேலும், இத்திட்டம் ஒரு ‘வாழும் ஆவணமாக’ (Living Document) இருக்கும் என்றும், காலப்போக்கில் செயற்கை நுண்ணறிவு (AI), STEM-லிருந்து STEAM-க்கான மாற்றம் (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கலை மற்றும் கணிதம்), நிலைத்தன்மை, ஆராய்ச்சிப் புத்தாக்கம் மற்றும் பாலிடெக்னிக்-சமூகக் கல்லூரிகளின் பங்களிப்பு ஆகியவற்றை உள்ளடக்கித் தொடர்ந்து மேம்படுத்தப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.















