தேதி: 19 ஜனவரி 2026
கோலாலம்பூர்

மலேசிய ஸ்டார் சிங்கர் குரல் தேர்வு 7 மாநிலங்களில் நடைபெறுகிறது: ஏகே குமார்
மலேசிய ஸ்டார் சிங்கர் பாடல் போட்டிக்கான குரல் தேர்வு நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் 7 மாநிலங்களில் நடத்தப்படவுள்ளதாக மலேசிய இந்தியர் பொதுநலக் கழகத்தின் தலைவர் ஏகே குமார் தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள இந்திய மாணவர்களிடையே காணப்படும் பாடும் திறனை வெளிப்படுத்தும் நோக்கில் இப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஆறாவது ஆண்டாக இவ்வாண்டும் இந்தப் போட்டி நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதன் அடிப்படையில், போட்டிக்கான தொடக்க குரல் தேர்வு சுற்று வரும் பிப்ரவரி 27ஆம் தேதி காலை 9 மணிக்கு கெடா மாநிலம் கூலிம் தமிழ்ப்பள்ளியில் நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து,
பிப்ரவரி 28 – பினாங்கு, வால்டோர் தோட்ட தமிழ்ப்பள்ளி
மார்ச் 1 – பேராக், கம்போங் சிமி தமிழ்ப்பள்ளி
ஏப்ரல் 4 – சிலாங்கூர், கிழக்கு வெஸ்ட் கண்ட்ரி தமிழ்ப்பள்ளி
மே 2 – நெகிரி செம்பிலான், லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி
மே 23 – மலாக்கா, டுரியான் துங்கால் தமிழ்ப்பள்ளி
ஜூன் 13 – ஜொகூர், யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளி
என ஏழு மாநிலங்களில் குரல் தேர்வுகள் நடைபெறவுள்ளன.
ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்த குரல் தேர்வில் கலந்து கொண்டு தங்களின் பாடல் திறனை வெளிப்படுத்துவார்கள் என நம்புவதாக ஏகே குமார் தெரிவித்தார். மேலும், இம்முறை தமிழ்ப்பள்ளி மாணவர்களுடன் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கும் போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
குரல் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் போட்டியின் மாபெரும் இறுதிப்போட்டியில் பங்கேற்கத் தேர்வு செய்யப்படுவர். இந்தியாவில் நடைபெறும் பாடல் திறன் போட்டிகளுக்கு இணையாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாகவும், வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரொக்கம் உட்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
இந்திய மாணவர்கள் பாடல் உள்ளிட்ட கலைத் துறைகளில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் இப்போட்டி நடத்தப்படுவதால், பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை இப்போட்டியில் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இப்போட்டிக்கு முழு ஆதரவு வழங்கி வரும் தாஸ்லி நிறுவனம், இந்தியா கேட் நிறுவனம், ஸ்ரீ லட்சுமி நிறுவனம், விஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் உள்ளிட்ட அனைவருக்கும் தனது நன்றியையும் ஏகே குமார் தெரிவித்தார்.
இப்போட்டி குறித்த மேலதிக விவரங்களுக்கு 016-750 8413 என்ற தொலைபேசி எண்ணில் ஏகே குமாரை தொடர்பு கொள்ளலாம்.















