ரோன் 95 எரிபொருள் நிரப்பிய சிங்கப்பூர் கார் ஓட்டுநருக்கு 9,000 ரிங்கிட் அபராதம்
ஜொகூர் பாரு | ஜனவரி 14

சிங்கப்பூர் பதிவு எண் கொண்ட காரில் ரோன் 95 வகை எரிபொருளை நிரப்பிய குற்றச்சாட்டில் சிக்கிய கார் ஓட்டுநருக்கு கூலாய் நீதிமன்றம் 9,000 மலேசிய ரிங்கிட் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
இந்த வழக்கு, மாஜிஸ்டிரேட் ஆர். ஷாலினி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, குற்றஞ்சாட்டப்பட்ட 64 வயதுடைய லோங் ச கொவ் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் அவருக்கு 9,000 ரிங்கிட் அபராதம் விதித்தது. அபராதத்தை செலுத்தத் தவறினால், அவர் ஒன்பது மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என நீதிமன்றம் தெரிவித்தது.
கடந்த ஜனவரி 2ஆம் தேதி, ஜாலான் ஜொகூர் பாரு – ஆயர் ஹித்தாம் பகுதியில் உள்ள ஒரு எரிபொருள் நிலையத்தில், சிங்கப்பூர் பதிவு எண் கொண்ட காரை ஓட்டிச் சென்ற லோங் ச கொவ் ரோன் 95 எரிபொருளை நிரப்பியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் பிரிவு 108(3) கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது 20,000 ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.















