மின்னல் எஃப்.எம். (Minnal FM), பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதிய நிகழ்ச்சி பெயர்கள், புதிய நிகழ்ச்சிகள் மற்றும் திருத்தப்பட்ட ஒலிபரப்பு நேர அட்டவணையுடன் ஒரு புதிய யுகத்தை (15 ஜனவரி 2026) தொடங்கியுள்ளது.

14 ஜனவரி 2026 | கோலாலம்பூர்

மலேசிய இந்தியர்களின் முன்னணி மற்றும் மிகவும் விரும்பப்படும் வானொலி நிலையமாக விளங்கும் மின்னல் எஃப்.எம். (Minnal FM), பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதிய நிகழ்ச்சி பெயர்கள், புதிய நிகழ்ச்சிகள் மற்றும் திருத்தப்பட்ட ஒலிபரப்பு நேர அட்டவணையுடன் ஒரு புதிய யுகத்தை (15 ஜனவரி 2026) தொடங்கியுள்ளது.

இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் இந்த முக்கிய மாற்றங்கள், காலத்தின் மாற்றத்தையும், கேட்போரின் வளர்ந்து வரும் எதிர்பார்ப்புகளையும் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று மின்னல் எஃப்.எம். தலைவர் திரு எஸ். குமரன் தெரிவித்தார்.

இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக, நீண்ட காலமாக ஒலிபரப்பாகி வந்த பல பிரபல நிகழ்ச்சிகள், தங்களின் அடிப்படை தன்மையைத் தக்கவைத்துக் கொண்டு புதிய பெயர்களுடன் அறிமுகமாகின்றன.

காலைக்கதிர் நிகழ்ச்சி இனி “வணக்கம் மின்னல்” என்ற பெயரில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரை ஒலிபரப்பாகும்.

இதனைத் தொடர்ந்து, “உல்லாசம் உற்சாகம்” நிகழ்ச்சி, “இளமை உல்லாசம்” என்ற புதிய பெயரில் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை ஒலிபரப்பாகும்.

பிற்பகல் 1.00 மணி முதல் 4.00 மணி வரையிலான நேரத்தில், முன்பு “எண்ணங்கள் வண்ணங்கள்” என்ற பெயரில் ஒலிபரப்பான நிகழ்ச்சி, தொடர்ந்து “இசையும் இசையும்” என்ற பெயரில் ஒலிபரப்பாகும்.

மாலை 4.00 மணி முதல் 8.00 மணி வரை ஒலிபரப்பாகி வந்த “ஆனந்த தென்றல்”, இனி “தீரா இசை” என்ற புதிய அடையாளத்துடன் கேட்போரைச் சந்திக்கும்.

இரவு நேர கேட்போருக்காக, “நட்சத்திர மேகம்” நிகழ்ச்சி இனி “காற்றின் மொழி” என்ற பெயரில் இரவு 8.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை ஒலிபரப்பாகும்.

நள்ளிரவு 12.00 மணி முதல் காலை 6.00 மணி வரை, முன்பு “தாலாட்டுதே வானம் / உதய காலம்” என்ற பெயரில் ஒலிபரப்பான இசை நிகழ்ச்சி, இனி “மின்னலின் இடை விடா இசை” என்ற தலைப்பில் தொடர்ச்சியான இசை நிகழ்ச்சியாக ஒலிபரப்பாகும்.

இதனுடன், 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்ட “ஒரு நேயர் அறிவிப்பாளராகிறார்” என்ற கருத்து, அதன் பழைய மற்றும் பிரபலமான பெயரான “ஒரு நேயரின் குரல்” என்ற தலைப்பில் மீண்டும் அறிமுகமாகிறது.

மேலும், “இவ்வாரப் பிரமுகர், நமது விருந்தினர்” என்ற புதிய பகுதியும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

அதேபோல், இரண்டு மணி நேரம் ஒலிபரப்பாகும் “இது நம்ம நேரம், மண்ணின் நட்சத்திரம்” நிகழ்ச்சி, புதிய வடிவமைப்புடன் மலேசிய கலைஞர்களை மையமாகக் கொண்டு, பாடல்கள் மற்றும் பிரத்யேக நேர்காணல்களுடன் வழங்கப்படும்.

மின்னல் எஃப்.எம். தொடர்ந்து அரசாங்கத்தின் முக்கிய தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுடன், இளைய தலைமுறையுடன் வலுவான பாலமாக செயல்படும் என்றும் திரு குமரன் தெரிவித்தார். சிறு வியாபாரிகள் முதல் தொழிலதிபர்கள் வரை பலரின் அனுபவங்களும் வெற்றிக் கதைகளும் “வணிகர்” நிகழ்ச்சியின் மூலம் பகிரப்படும் என்றும் அவர் கூறினார்.

மொழி, மதம், கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை பேணிக் காக்கும் அதே வேளையில், இளைய தலைமுறையை வழிநடத்தி மக்களுக்குப் மேலும் நெருக்கமாக மின்னல் எஃப்.எம். பயணிக்க இந்த மாற்றங்கள் உதவும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *