சிலாங்கூர் மாநில அரசின் முன்னெடுப்பில் செயல்படுத்தப்படும் மாநில ஐ.சீட் (ICET) உதவிப் பொருள் திட்டத்தின் கீழ், சபாக் பெர்ணம் மாவட்டத்தில் வசிக்கும் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த 12 இந்தியர்கள் சுயதொழிலுக்குத் தேவையான உதவிப் பொருட்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஷா ஆலம் | ஜனவரி 3

சிலாங்கூர் மாநில அரசின் முன்னெடுப்பில் செயல்படுத்தப்படும் மாநில ஐ.சீட் (ICET) உதவிப் பொருள் திட்டத்தின் கீழ், சபாக் பெர்ணம் மாவட்டத்தில் வசிக்கும் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த 12 இந்தியர்கள் சுயதொழிலுக்குத் தேவையான உதவிப் பொருட்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இந்தத் திட்டம் மனித வள மற்றும் மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் அவர்களின் கண்காணிப்பில் செயல்படுத்தப்பட்டதாகவும், பயனாளர்கள் அனைவரும் முறையாக மனு செய்து உதவிப் பொருட்களை பெற்றதாகவும் ஐ.சீட் உதவிப் பொருள் திட்டத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மாதவன் முனியாண்டி தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தின் கீழ்:

குமுதவல்லி சுப்ரமணியம் – தையல் இயந்திரம்

வேணு கண்ணா ராமன் – ஆயர் டிரக் ஜேக்

நேசமணி துரைராஜ் – தையல் இயந்திரம்

ராஜேஸ் சுரேஸ் – ஜெனரேட்டர்

பத்மநாதன் பரமசிவம் – ஷோப்பர் இயந்திரம்

தேவேந்திரன் ராமசாமி – தோட்ட நீர் பாய்ச்சும் இயந்திரம்

கர்ணன் ராஜூ – இரு கதவு கொண்ட குளிர்பதன சாதனம்

முனியாண்டி பிச்சை – இரு கதவுள்ள குளிர்சாதனப் பெட்டி

மதிவாணன் வேலு – சிகை அலங்கார நாற்காலி

ரீத்தாகுமாரி பெருமாள் – வெல்டிங் இயந்திரம்

கோகிலவாணி முருகன் – நீர் சுத்திகரிப்பு இயந்திரம்

மாரியம்மாள் ராமன் – வாகன டயர்கள் மாற்றும் இயந்திரம்

ஆகியோர் தங்களது சுயதொழிலுக்கேற்ற உதவிப் பொருட்களை பெற்றுக் கொண்டதாக மாதவன் தெரிவித்தார்.

மேலும், திட்ட உதவியாளர்களுடன் இணைந்து பயனாளர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று உதவிப் பொருட்கள் ஒப்படைக்கப்பட்டு, அதற்கான உறுதிக் கடிதங்களில் ஒப்புதல் பெறப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்தத் திட்டம், மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்களின் ஆலோசனையின் பேரில், வசதி குறைந்த இந்திய குடும்பங்களைச் சேர்ந்தவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் சுயதொழில் தொடங்குவதற்காக செயல்படுத்தப்படுவதாகவும் விளக்கினார்.

புத்தாண்டை முன்னிட்டு, ஐ.சீட் உதவிப் பொருள் திட்டத்தில் பங்கேற்க விரும்புவோர், தங்களது வட்டார சட்டமன்ற மக்கள் சேவை மையங்கள் வழியாக மனு செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

அதே நேரத்தில், மாநில அரசின் சார்பில் வழங்கப்படும் உதவிப் பொருட்களை வாடகைக்கு விடவோ அல்லது விற்பனை செய்யவோ கூடாது என்ற நிபந்தனை ஒப்பந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இதனை உறுதி செய்ய நியமிக்கப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என்றும் மாதவன் முனியாண்டி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *