இந்திய சமூகத் தலைவர்களின் பங்களிப்பு அவசியம் – பாப்பா ராய்டு வீரமான்

இந்திய சமூகத் தலைவர்களின் பங்களிப்பு அவசியம் – பாப்பா ராய்டு வீரமான்

ஷா ஆலம் | ஜனவரி 1

இவ்வாண்டில் வகுக்கப்பட்டுள்ள சிலாங்கூர் மாநில அரசின் மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட இந்திய சமூகத் தலைவர்களின் பங்களிப்பு இன்றியமையாதது என மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் தெரிவித்துள்ளார்.

இந்திய சமூகத் தலைவர்களின் சேவைகள், சட்டமன்ற மக்கள் சேவை மையங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் மாநில அரசின் நிர்வாகக் குழுவினரின் திட்டமிடல் மற்றும் வழிகாட்டுதலின் மூலம், மாநிலத்தில் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு உதவித் திட்டங்கள் முறையாகச் சென்றடையும் என அலை ஒளி செய்தியாளரிடம் அவர் விளக்கம் அளித்தார்.

கடந்த ஆண்டைக் காட்டிலும் இவ்வாண்டு மாநில அளவில் மக்களின் தேவைகள் அதிகரித்துள்ள நிலையில், அவற்றை முன்னெடுத்து நிறைவு செய்ய மாநில அரசு முழுமையாகத் தயாராக இருப்பதாகவும் பாப்பா ராய்டு வீரமான் தெரிவித்தார்.

மேலும், மாநில அரசின் மக்கள் நலத் திட்டங்களை உள்ளடக்கிய அனைத்து நடவடிக்கைகளும் இவ்வாண்டு தொடக்கம் முதல் கட்டம் கட்டமாக மக்களிடம் கொண்டு செல்லப்படும் என்றும் அவர் கூறினார். வசதி குறைந்த குடும்பங்களுக்கு நிதி மற்றும் அடிப்படை உதவிகள், ஏழை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைகள், சுயமாக தொழில் தொடங்க விரும்புவோருக்கு இலவச உதவிப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் உரிய பயனாளர்களைச் சென்றடையும் வகையில் செயல்படுத்தப்படும் என அவர் உறுதியளித்தார்.

மாநில அரசின் மக்கள் நல முயற்சிகள் சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் பயன் அளிக்கும் வகையில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் பாப்பா ராய்டு வீரமான் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *