தேதி: 01 ஜனவரி 2026
பத்துமலை

சபரிமலை செல்லும் மலேசிய பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்க விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் – யுவராஜா குருசாமி வலியுறுத்தல்
சபரிமலைக்கு யாத்திரை மேற்கொள்ளும் மலேசிய பக்தர்கள், அங்குள்ள கடும் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு தேவஸ்தான விதிமுறைகளை முறையாக பின்பற்றி பாதுகாப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று பத்துமலை ஸ்ரீ ஐயப்பசுவாமி தேவஸ்தானத்தின் தலைவர் யுவராஜா குருசாமி கேட்டுக் கொண்டார்.
பத்துமலையில் அமைந்துள்ள ஸ்ரீ ஐயப்பசுவாமி ஆலயத்தில் நேற்று நடைபெற்ற இருமுடி கட்டு திருவிழா சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் காலை 9 மணி முதல் மாலை வரை சுமார் 10,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, தங்களின் விரத காணிக்கைகளைச் செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, பக்தர்கள் சபரிமலைக்கு யாத்திரை செல்லத் தயாராகி வருகின்றனர். பத்துமலை ஸ்ரீ ஐயப்பசுவாமி தேவஸ்தானத்தின் சார்பில் மட்டும் 350 பக்தர்கள் குழுவாக சபரிமலைக்கு புறப்பட உள்ளனர். இதேபோன்று மலேசியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலை யாத்திரை மேற்கொள்ள உள்ளனர்.
இந்த நிலையில், சபரிமலையில் தற்போது கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் நிலவி வருவதாக அங்குள்ள தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய யுவராஜா குருசாமி, பக்தர்கள் தங்களின் பாதுகாப்பை முதன்மையாகக் கருத வேண்டும் என்றார்.
“யாத்திரை காலத்தில் அவசரம், தள்ளுமுள்ளு போன்றவற்றை தவிர்த்து, வரிசை முறையை கடைப்பிடிக்க வேண்டும். காவல் துறையினர் மற்றும் தேவஸ்தான பணியாளர்கள் வழங்கும் அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்றினாலே போதுமானது. இதன் மூலம் கூட்ட நெரிசலால் ஏற்படும் அசம்பாவிதங்களை தவிர்க்கலாம்,” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், குழுவாகச் செல்லும் பக்தர்கள் ஒருவரை ஒருவர் கவனித்து, உடல்நல குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
சபரிமலை யாத்திரை என்பது ஆன்மிக ஒழுக்கமும், கட்டுப்பாடும் நிறைந்த பயணம் என்பதால், அனைத்து பக்தர்களும் பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டு பாதுகாப்பான யாத்திரையை மேற்கொள்ள வேண்டும் என்று யுவராஜா குருசாமி வலியுறுத்தினார்.















