இந்திய மாணவர்களின் மேம்பாட்டுக்காக உதவிக் கரம் நீட்டுகிறது சூப்பர் வீணஸ்

இந்திய மாணவர்களின் மேம்பாட்டுக்காக
உதவிக் கரம் நீட்டுகிறது சூப்பர் வீணஸ்

கோலாலம்பூர், டிச.23-


கலை துறையில் ஆர்வம் காட்டும் அதே வேளையில் இந்திய மாணவர்கள் குறிப்பாக தமிழ்ப்பள்ளி மாணவர்களின் மேம்பாட்டிற்காகவும் நாங்கள் பாடுபட்டு வருகிறோம் என்று சூப்பர் வீணஸ் அமைப்பின் தலைவர் லாரன்ஸ் கூறுகிறார்.
இதனை முன்னிட்டு அடுத்தாண்டு ஜனவரி 17ஆம் தேதி இரவு 7 மணியளவில் பண்டார் துன் ரசாக், ஜாலான் யாக்கோப் லத்திப் எனுமிடத்தில் உள்ள பண்டார் துன் ரசாக் விளையாட்டு மண்டபத்தில் தீப கானம் என்ற கலாச்சார இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
கோலாலம்பூர் சமூக நல கல்வி சங்கத்துடன் இணைந்து இந்த நிகழ்ச்சி நடத்தப்படும். இதில் கிடைக்கும் நிதியை கொண்டு பல்வேறு உதவிகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
குறைந்த வருமானம் பெறுகின்ற பிள்ளைகளுக்கு இலவச கல்வி, டியூசன் வகுப்புகள் நடத்தப்படும். மேலும் அவர்களுக்கு ஆங்கில மொழி வகுப்புகள் நடத்தப்படுவதுடன் கணினி பொருட்களும் வழங்கப்படும்.
முதியவர்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு இலவசமாக சக்கர வண்டிகள் வழங்கப்படுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படும். வசதி குறைந்தவர்களுக்கு தேவையான பொருள் உதவியும் வழங்கப்படும். குழந்தைகளுக்கு தேவையான பால் மற்றும் ஊட்டச் சத்துணவு பொருட்களையும் வழங்குவதற்கு நாங்கள் முடிவு செய்திருக்கிறோம் என்று லாரன்ஸ் கூறினார்.
உள்ளூர் கலைஞர்களுக்கு ஆதரவு அளிக்கும் அதே வேளையில் இதுபோன்ற சமூக உதவிகளையும் தொடர்ந்து நாங்கள் வழங்கி வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார். ஆகவே கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு பல்வேறு சமூக நிகழ்ச்சிகளை நடத்தி வரும் சூப்பர் வீணஸ் குழுவினரின் முயற்சிக்கு பொது மக்கள் ஆதரவு வழங்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *