தாய் இருக்க மாற்றான் தாயிடம் தஞ்சமா? மலேசியத் தமிழ்மொழிக் காப்பகம் (மதகம்) எங்கே போனது?

தாய் இருக்க மாற்றான் தாயிடம் தஞ்சமா? மலேசியத் தமிழ்மொழிக் காப்பகம் (மதகம்) எங்கே போனது?

கோலாலம்பூர் – டிசம்பர் 25, 2025:

மலேசியத் தமிழ்க் கல்விச் சூழலில் ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. சிலாங்கூர் மாநிலக் கல்வித் இலாகாவின் ஏற்பாட்டில் அண்மையில் நடைபெற்ற “தமிழ்மொழி கல்வி கருத்தரங்கு 2025” நிகழ்ச்சியில், தமிழ் அமைப்புகளுக்குப் பதிலாகச் சீன மொழி மன்றத்தின் பங்களிப்பு முன்னிலைப்படுத்தப்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

 

இந்தக் கருத்தரங்கிற்கு வழங்கிய பங்களிப்பிற்காக மலேசியச் சீன மொழி மன்றத்தின் (Majlis Bahasa Cina Malaysia) தலைவர் டத்தோ எடி ஹெங் அவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஒரு தமிழ் மொழி நிகழ்ச்சிக்குச் சீன மொழி மன்றம் முன்வந்து உதவியதை இருகரம் கூப்பி வரவேற்பதாகக் கூறும் தமிழ் ஆர்வலர்கள், அதே வேளையில் ஒரு முக்கியமான கேள்வியையும் எழுப்புகின்றனர்.

 

“சொந்தத் தாய் இருக்க, மாற்றான் தாயிடம் செல்ல வேண்டிய கட்டாயம் என்ன?” என்பதுதான் இப்போது கல்வியாளர்கள், தமிழ்மொழிப் பற்றாளர்களின் முக்கியக் கேள்வியாக உள்ளது. மலேசியாவில் தமிழ் மொழியின் தரத்தையும் வளர்ச்சியையும் கண்காணிக்கவும், இத்தகைய கல்வி சார் நிகழ்வுகளை முன்னெடுக்கவும் மலேசியத் தமிழ்மொழிக் காப்பகம் (மதகம் – Majlis Pembakuan Bahasa Tamil Malaysia) எனும் உயரிய அமைப்பு இருக்கும்போது, அஃது ஏன் இந்த நிகழ்வில் புறக்கணிக்கப்பட்டது?

 

மதகம் உயிரோடுதான் இருக்கிறதா? அல்லது செயல்பாடின்றி முடங்கிக் கிடக்கிறதா?

 

தமிழ்மொழிக் கல்வி தொடர்பான கொள்கை முடிவுகளிலும் கருத்தரங்குகளிலும் முதன்மை வகிக்க வேண்டிய மதகம், திட்டமிட்டு ஒதுக்கப்பட்டதா?

 

தமிழ் மொழிக் கல்வி சார்ந்த விவகாரங்களில் நமது சொந்த அமைப்புகள் முன்னின்று செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது. சீன மொழி மன்றத்தின் உதவி பாராட்டுக்குரியது என்றாலும், நமது மொழி சார்ந்த அடையாளங்களையும் அமைப்புகளையும் (மதகம் போன்றவற்றை) பலவீனப்படுத்தும் வகையில் இத்தகைய செயல்பாடுகள் அமைந்துவிடக் கூடாது எனச் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *