கோலாலம்பூர் | 21 டிசம்பர் 2025

மலேசியாவில் ‘ஜனநாயகன்’ திரைப்பட வெளியீடு – இந்திய சினிமா வரலாற்றில் புதிய சாதனை படைக்கும் : டத்தோ பி. குணசீலன்
தென்னிந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமும், உயர்ந்த சம்பளம் பெறும் நடிகருமான தளபதி விஜயின் ‘ஜனநாயகன்’ திரைப்பட வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறவுள்ளதாகவும், இது இந்திய திரைப்பட வரலாற்றில் புதிய மைல்கல்லாக அமையப்போவதாகவும் பிபிஆர்எம் (PPRM) அமைப்பின் தலைவர் டத்தோ பி. குணசீலன் தெரிவித்துள்ளார்.
2026 டிசம்பர் 27ஆம் தேதி மலேசியாவில் நடைபெறவுள்ள இந்த பிரமாண்ட திரைப்பட வெளியீட்டு விழா, இந்தியாவுக்கு வெளியே நடைபெறும் மிகப் பெரிய இந்திய திரைப்பட நிகழ்வாக இருக்கும் என்றும், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்நிகழ்வு கின்னஸ் உலக சாதனையாகவும் பதிவு செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறினார்.
இந்த நிகழ்வை மலேசியாவைச் சேர்ந்த அனுபவமிக்க சர்வதேச நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் டத்தோ மாலிக் ஏற்பாடு செய்து வருகிறார். பாதுகாப்பு, ஒழுங்கமைப்பு உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் மிகத் துல்லியமாக திட்டமிடப்பட்டுள்ளதாகவும், பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவம் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் பணியாற்றிய 200க்கும் மேற்பட்ட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் இதில் பங்கேற்க உள்ளனர். இதனுடன், பாலிவுட், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த முன்னணி திரை பிரபலங்களும் கலந்து கொள்ளவுள்ளனர். மேலும், விஜயின் திரைப்படங்களில் பாடிய 35 பாடகர்கள் நேரடி இசை நிகழ்ச்சியில் பாட உள்ளனர். இசையமைப்பாளர் அனிருத், இந்த நிகழ்வில் விஜய்க்காக சிறப்பு ஏற்பாடுகள் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
தளபதி விஜய் தானே மேடையேறி பாடல், நடன நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உரைகளை கேட்பதற்காகவே பெரும் மக்கள் திரளுவதாக டத்தோ குணசீலன் குறிப்பிட்டார்.
இந்த விழா முழுக்க முழுக்க அரசியலற்ற, பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மட்டுமே நடைபெறும் என்றும், விஜய் இதைத் தெளிவாக தெரிவித்துள்ளார் என்றும் அவர் கூறினார். சிறந்த நடனக் கலைஞர், போராளி மற்றும் உணர்வுகளை நுட்பமாக வெளிப்படுத்தும் நடிகர் என்ற வகையில் விஜய் இந்த தலைமுறையின் மிகப் பெரிய நட்சத்திரமாக விளங்குகிறார் என்றும் அவர் பாராட்டினார்.
‘ஜனநாயகன்’ விஜயின் இறுதி திரைப்படமாக இருக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே பெரும் உணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், மக்களின் ஆதரவுக்காக தனது உச்சக்கட்டத்தில் சினிமாவை விட்டு விலகி சேவை பாதையை தேர்வு செய்வது இந்திய சினிமாவுக்கு ஒரு பெரிய இழப்பாக இருக்கும் என்றும் டத்தோ குணசீலன் தெரிவித்தார்.
‘ஜனநாயகன்’ திரைப்பட வெளியீட்டு விழா இந்திய சினிமா வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதும் என நம்பிக்கை தெரிவித்த அவர், இந்த உலகத்தர நிகழ்ச்சிக்காக அயராது உழைக்கும் டத்தோ மாலிக் மற்றும் அவரது குழுவினருக்கு தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.
செய்தி: வீரா சின்னையன்














