மனிதவள அமைச்சர் பதவியேற்றார் டத்தோ’ ஸ்ரீ ரமணன்
17 டிசம்பர் 2025


கோலாலம்பூர் – மதானி அரசின் மறுசீரமைக்கப்பட்ட அமைச்சரவையில் மனிதவள அமைச்சராக டத்தோ’ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இன்று அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார்.
நேற்று பிரதமர் டத்தோ’ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த புதிய அமைச்சரவையின் தொடர்ச்சியாக இந்நியமனம் இடம்பெற்றது. மொத்தம் ஏழு அமைச்சர்கள் மற்றும் எட்டு துணை அமைச்சர்களைக் கொண்ட இந்த அமைச்சரவை, இன்று காலை இஸ்தானா நெகாரா (தேசிய அரண்மனை)யில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டது.
யாங் டி-பெர்துவான் ஆகோங் (மன்னர்) சுல்தான் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற அதிகாரப்பூர்வ விழாவில், டத்தோ’ ஸ்ரீ ரமணன் தனது அமைச்சரவை சகாக்களுடன் இணைந்து பதவிச் சத்தியம் செய்து, நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். முழுமையான அரச மரபுகளுடன் நடைபெற்ற இவ்விழா, மதானி நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் நாட்டுக்கு சேவை செய்யும் புதிய தலைமையின் பொறுப்பையும் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்தியது.
பதவியேற்புக்குப் பின்னர், மனிதவள அமைச்சராக தனது கடமைகளை டத்தோ’ ஸ்ரீ ரமணன் உடனடியாகத் தொடங்கியுள்ளார். நாட்டின் தொழிலாளர் வளர்ச்சி, தொழிலாளர் உரிமைகள், மனித மூலதன மேலாண்மை உள்ளிட்ட கொள்கைகள் மற்றும் முயற்சிகளை மேற்பார்வையிடும் முக்கிய பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.















