அரசியல் லாபத்திற்காக இனவாதத்தை தூண்ட வேண்டாம் – துணையமைச்சர் சரஸ்வதி அறிவுறுத்தல்
16 டிசம்பர் 2025

நாட்டில் நிலவும் இனவாதப் பிரச்சினைகளில் பெரும்பாலானவை அரசியல் தலைவர்களின் செயல்பாடுகளுடன் தொடர்புடையதாக பதிவாகியுள்ளதாக தேசிய ஒருமைப்பாடு துறை துணையமைச்சர், செனட்டர் சரஸ்வதி கந்தசாமி தெரிவித்தார்.
இன்று மேலவையில் எழுப்பப்பட்ட கூடுதல் கேள்விக்கு பதிலளித்த அவர், குறிப்பாக தேர்தல் காலங்களில் சில அரசியல் தலைவர்கள் வெளியிடும் கருத்துகள் மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தையும் சமூக அசாந்தியையும் உருவாக்குவதாகக் குறிப்பிட்டார்.
சமூகத்தில் நிலவும் இன ரீதியிலான பிரச்சினைகளை நீக்குவதற்காக தேசிய ஒருமைப்பாடு அமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்த செனட்டர் சரஸ்வதி, இருப்பினும் தரவுகளின் அடிப்படையில் அரசியல் தலைவர்களால் உருவாகும் பிரச்சினைகளே அதிகமாக உள்ளன என சுட்டிக்காட்டினார்.
அரசியலில் வெற்றியும் தோல்வியும் இயல்பானவை என்றும், அவற்றை மிகுந்த பொறுப்புணர்வுடன் கையாள வேண்டிய அவசியம் உள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார். வரம்பு மீறிய, பொறுப்பற்ற செயல்கள் சமூகத்தில் பிளவை ஏற்படுத்தும் என்பதை அரசியல் தலைவர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
அரசியல் லாபத்திற்காக இனவாதத்தைத் தூண்டும் நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும் எனக் கூறிய துணையமைச்சர், தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கத்தை பாதுகாப்பது அனைவரின் பொறுப்பும் என தெரிவித்தார்.















