மலேசிய சுற்றுலா வாரியத்திற்கு புதிய பொது இயக்குநர்
,கோலாலம்பூர் டிசம்பர் 11 — மலேசியச் சுற்றுலா வாரியம் தனது புதிய பொது இயக்குநராக முகமட் அமீருல் ரிஸால் அப்துல் ரஹீம் நியமிக்கப்பட்டதாக இன்று அறிவித்தது. சுற்றுலா மலேசியா சட்டம் 481.1992 இன் பிரிவு 10(1) அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நியமனம், சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோ ஸ்ரீ தியோங் கிங் சிங் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த நியமனம், டிசம்பர் 6 அன்று ஓய்வு பெற்ற முன்னாள் பொது இயக்குநர் டத்தோ மனோகரன் பெரியசாமி அவர்களுக்குப் பதிலாக அமலுக்கு வந்துள்ளது.
யுனிவர்சிட்டி டெக்னாலஜி மாரா (UiTM) பல்கலைக்கழகத்தில் சுற்றுலா நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற அமீருல் ரிஸால், 2 செப்டம்பர் 2002 அன்று சுற்றுலா மலேசியாவில் தனது பணியைத் தொடங்கினார். கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலான சேவை காலத்தில், ஆராய்ச்சி பிரிவு, சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு பிரிவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றியதுடன், 2008ஆம் ஆண்டு தென் கொரியாவின் சியோல் நகரில் உள்ள சுற்றுலா மலேசியா அலுவலகத்தில் பணியாற்றுவதற்குத் தேர்வாகினார்.
அத்துடன், நாட்டின் பல மாநிலங்களிலும், வெளிநாட்டு கிளை அலுவலகங்களிலும் இயக்குநராக பணியாற்றி, சுற்றுலா முன்னேற்றத்திற்கான முக்கிய பொறுப்புகளை ஏற்று செயல்பட்ட அனுபவமும் அவருக்கு உண்டு.
மலேசியாவின் சுற்றுலாத்துறையை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு தனது புதிய பொறுப்பை ஏற்கும் அமீருல் ரிஸால், எதிர்கால வளர்ச்சி முனைப்புகளை முன்னெடுக்க உள்ளதாக சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது.
















