தேதி: 06 டிசம்பர் 2025 — பெஸ்தாரி ஜெயா


பெஸ்தாரி ஜெயாவில் அமைந்துள்ள தேசிய மாதிரி ஹோப்புள் தோட்டத் தமிழ்ப் பள்ளி தனது ஆறாம் ஆண்டு நேர்த்திநிலை (பட்டமளிப்பு) கொண்டாட்டத்தை டிசம்பர் 6ஆம் தேதி மிகச் சிறப்பாகக் கொண்டாடியது.
இவ்விழாவில் தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி சிறப்பு பிரமுகராக கலந்து கொண்டு மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
பள்ளி குறித்து கருத்து தெரிவித்த அவர்,
“தோட்டப் புறத்திலேயே ஒரு மாளிகை போன்ற தரமான பள்ளி இது. நேரில் வந்து பார்த்தபோது பெருமை அதிகரித்தது,”
என்று பாராட்டினார்.
மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், பள்ளியின் அமைப்பு, சூழல், கல்வித்தரம் ஆகியவை குறிப்பிடத்தக்க உயர்வில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
பள்ளியின் வளர்ச்சிக்கு தலைமை ஆசிரியர் மகேஸ்வரி சுப்பிரமணியம் தலைமையில் மேற்கொள்ளப்படும் நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள் சிறப்பாக அமைந்துள்ளன என்றும் அவர் புகழ்ந்தார்.
மேலும், இப்பள்ளி முன்னேற மடானி அரசாங்கம் தொடர்ந்து பல்வேறு உதவிகளை வழங்கி வருவதாக துணையமைச்சர் தெரிவித்தார்.
தமிழ் கல்வி முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர்,
“இந்திய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ்ப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும். மொழியின் வழி தான் நம் சமூக வளர்ச்சி தழைக்க முடியும்,”
என்று அழைப்பு விடுத்தார்.
பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து செயல்படுவதின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
ஹோப்புள் தோட்டத் தமிழ்ப் பள்ளியின் விழா மாணவர்களின் நிகழ்ச்சிகளுடன் இனிதே நிறைவுற்றது.
Naam Oru Malaysian















