தேதி: 3 டிசம்பர் 2025

மலேசிய தமிழ் பள்ளிகள் மற்றும் SMK மாணவர்கள் WRG 2025–இல் 80-க்கும் மேற்பட்ட பதக்கங்கள்… நாட்டுக்கு பெருமை!
தைவான், தைபே – உலகின் மிக முக்கியமான ரோபோடிக்ஸ் போட்டிகளில் ஒன்றான World Robot Games (WRG) 2025–இல் மலேசிய மாணவர்கள் மறுபடியும் சர்வதேச மேடையில் தங்கள் திறமையை நிரூபித்து வரலாறு படைத்துள்ளனர்.
Syscore Academy–யின் வழிகாட்டுதலின் கீழ், மலேசியாவை பிரதிநிதித்துவப்படுத்திய 24 மாணவர்கள் கடந்த 25 நவம்பர் முதல் 1 டிசம்பர் 2025 வரை நடைபெற்ற WRG–இல் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்று அதிவிசேஷமான சாதனைகளைப் படைத்தனர்.
WRG என்பது தைவான், ஜப்பான், தென் கொரியா, இந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் மலேசியா உள்ளிட்ட 10 நாடுகளிலிருந்து 1,000-க்கும் மேற்பட்ட போட்டியாளர்களை ஒன்று திரட்டும் உலகளாவிய STEM மேடை ஆகும்.

கடந்த ஆண்டின் வெற்றியை மிஞ்சிய 2025 சாதனை
2024–இல் சிங்கப்பூரில் நடைபெற்ற WRG–இல் மலேசியா பெருமை சேர்த்திருந்தது:
• சுமோ ரோபோட் பிரிவில் சாம்பியன்
• புரோகிரம்மிங் பிரிவில் இரண்டாம் & மூன்றாம் இடம்
• உலகின் சிறந்த 10 புதுமைத் திட்டங்களில் ஒன்று என Innovation Project பிரிவில் தேர்வு
இந்த ஆண்டில், மலேசிய அணி அதையும் தாண்டி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.
மாணவர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு பதக்கத்துடன் வீடு திரும்பினர்
நேற்று, மாணவர்களை வரவேற்க பின்னாங்கு சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு கலந்து கொண்ட பினாங்கு மாநில தமிழ் பள்ளிகள் சிறப்பு குழு தலைவர் டத்தோ’ சுந்தரராஜூ சோமு, மாணவர்களின் வெற்றியை “வரலாற்றுச் சாதனை” என பாராட்டினார்.

இந்த ஆண்டு, 80-க்கும் அதிகமான பதக்கங்கள் மலேசிய அணியால் வெல்லப்பட்டது என்பது கடந்த ஆண்டின் சாதனையைக் கூட மீறிய ஒன்றாகும்.
“மாணவர்களின் முகத்தில் தெரிந்த அந்த தன்னம்பிக்கை, உற்சாகம், முயற்சி — நம் தமிழ் மக்களின் அடுத்த தலைமுறையினர் உலகளவில் திகழக்கூடிய திறனை உண்டாக்குகிறது,” என்று டத்தோ’ சுந்தரராஜூ சோமு கூறினார்.
Tamil கல்வி மற்றும் STEM துறைகளில் மேம்பாட்டுக்கு உறுதியான நடவடிக்கை
தமிழ் பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்துவது தான் மிகப் பெரிய பொறுப்பாக உள்ளதெனவும், எதிர்காலத்தில் STEM, ரோபோடிக்ஸ், தொழில்நுட்ப கல்விகளுக்கான அணுகலை மேலும் விரிவுபடுத்தப்படுவதென்றும் அவர் தெரிவித்தார்.
Syscore Academy, பயிற்சியாளர்கள், பெற்றோர்கள் – அனைவருக்கும் நன்றி
இந்தச் சாதனைக்குப் பின்னால் உழைத்த Syscore Academy, பயிற்சியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களை ஊக்குவித்த அனைவருக்கும் அவர் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.
துணிவுடன் கனவு காணுங்கள் — டத்தோ’ சுந்தரராஜூ சோமு
“இந்த வெற்றி மலேசியாவின் பெருமை மட்டுமல்ல; அது முழு தமிழ் சமூகத்திற்கும், குறிப்பாக பின்னாங்கு மக்களுக்கும் பெருமை சேர்க்கும் ஒரு வரலாற்றுப் பதிவு. இது இன்னும் பல தமிழ் மாணவர்கள் உயர்ந்த கனவுகளை காணத் தூண்டட்டும்,” என்று அவர் தெரிவித்தார்.
— டத்தோ’ சுந்தரராஜூ சோமு
Pengerusi, Jawatankuasa Khas Sekolah Tamil Pulau Pinang















