ஷா ஆலம், டிசம்பர் 02 – செக்ஷன் 3, WCE (மேற்கு கடற்கரை நெடுஞ்சாலை) திட்டத்திற்காக கிள்ளான் கம்போங் ஜாவா குடியிருப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகற்றும் நடவடிக்கை இன்று எந்தத் தடங்கலுமின்றி, முழுமையான கட்டுப்பாட்டுடன் சீராக நடைபெற்றதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் தெரிவித்தார்.

காலை ஆரம்பிக்கப்பட்ட இந்தச் செயற்பாட்டின் போது, பொதுமக்கள் போலீசாருக்கு வழங்கிய ஒத்துழைப்பை அவர் பாராட்டினார். மேலும், பொது ஒழுங்கைக் கையாள்வதற்காக போதுமான பணியாளர்கள் மற்றும் வளங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயன்படுத்தப்பட்டதாகவும் விளக்கினார்.
“தென் கிள்ளானின் OCPD-யும் நேரடியாக இங்கு கண்காணிப்பில் உள்ளார். அவரின் முன்னிலையில் செயல்பாடுகள் மேலும் ஒழுங்காக நடைபெற்று வருகின்றன. பொதுமக்களின் ஒத்துழைப்பிற்கும், இந்தப் பணியை மேற்கொண்டு வரும் அதிகாரிகள் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு அமைதியாக செயல்படுவதற்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன்,” என டத்தோ ஷாசெலி கஹார் கூறினார்.
“இப்போது வரை எவ்வித அவசர நிலையும் உருவாகவில்லை. அத்தகைய சூழ்நிலைகள் உருவாகாமல் இருப்பதற்காக நாங்கள் தொடர்ந்து பிரார்த்திக்கிறோம். எவ்வித சூழ்நிலையையும் சமாளிக்க போலீஸ் துறையின் தயாரிப்புகள் தக்க நிலையில் உள்ளன,” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இன்று சிலாங்கூர் வணிக குற்றப் புலனாய்வுத் துறையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்விவரங்களைப் பகிர்ந்தார்.















