“எனக்கு பசிக்கிறது” என்று உரிமையோடு கேட்டுச்சாப்பிட…

மாமா, அப்பா, மாமியின் அண்ணன் மூவரும் நண்பர்கள். மட்டுநகர் பாலத்தில் கூடியிருந்து கதைக்கும் கூட்டு. அந்த நாளிலே கொஞ்சம் குழப்படிக் கூட்டுத்தான்.
ஆனால், மாமா-மாமி திருமணம் மற்றும் எங்கள் அப்பா, அம்மா திருமணம் ஆகியவற்றுக்குப் பிறகு அவர்களது உறவு அவ்வளவு நெருக்கத்துக்கு இடம்கொடுக்கவில்லை. ஆண்கள் இவர்களின் பொறுப்பின்மைதான் இதற்கு காரணம் என்று நினைக்கிறேன். உதாரணமாகச் சொன்னால், எனது அப்பாவும் மாமாவும் ஒரே வீட்டில் இருந்துகொண்டு, ஒரே வட்டாரத்தில்(கல்லடித்தெரு, ஆயித்தியங்காடு, மத்தியேஸ் வீதி அடங்கிய வட்டாரம்) ஒருவரை ஒருவர் எதிர்த்து மாநகரசபை தேர்தலில் போட்டியிட்டவர்கள், இருவரும் தோற்றவர்கள். அந்த அளவுக்கு பொறுப்பற்ற உறவு. ஆனால், எனக்கும் மாமிக்குமான உறவில் எந்த நேரத்திலும் இறக்கம் ஏற்பட்டது கிடையாது. யார் பேசினாலும் பேசாவிட்டாலும், நான் அவரிடம் சென்று உரிமையோடு சாப்பிட்டு வருவேன். கண்ட கதையெல்லாம் அவரிடம் பேசுவேன், எல்லாவற்றையும் கேட்டுக்கொள்வார், பெரிதும் பதில் பேசமாட்டார். சிரிப்பார்.
மாமா பெயர் சாரங்கபாணி, இறுதியாக மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் அதிபராக ஓய்வுபெற்ற ஒரு தமிழ் ஆசிரியர். மாமி அதிகம் படிக்கவில்லை. ஆனால், ஒரு பெருந்தனக்காரக் குடும்பத்தின் மூத்த மகள். தனது கடைசித் தம்பியை தானே தூக்கி வளர்த்தவர். அந்தளவு குடும்பப்பொறுப்பு. மிகச்சிறிய வயதிலேயே திருமணமாகி வந்துவிட்டதால், அவரது குடும்பத்தைவிட, எங்கள் குடும்பத்தோடு(மாமாவின்) வாழ்ந்ததே அதிகம்.
மாமிக்கு மொத்தம் 9 குழந்தைகள். இரண்டு பெண்களும் என்னைவிட பெரியவர்கள், அவருடைய அனைத்து ஆண்பிள்ளைகளைவிட நான் வயதில் பெரியவன். குடும்பத்தில் முதல் பார்த்த ஆண்பிள்ளை என்பதனாலோ என்னவோ, என்னோடு அவ்வளவு பாசம். என்னை அடிமுதல் தலை உச்சிவரை அவருக்கு நன்றாகப் புரியும். நான் என்ன அட்டகாசம் செய்தாலும், “இந்த எருமை இவ்வளவுதான்” என்பது மாமிக்கு நன்றாகத்தெரியும். அந்த வீட்டில் எனக்கு மாமாவைப்பார்த்து மாத்திரந்தான் பயம். அவர் வெளியே போனால், அங்கு நான் தான் பெரிய ஆள் என்று நினைத்துக்கொள்வேன், நடப்பேன். இது எதையும் மாமி கண்டுகொள்வதில்லை. வயிற்றுக்கு நன்றாகச் சாப்பாடு போட்டு அனுப்புவார்.
மாமா-மாமி திருமணமானது முதல், கனகாலம் அவர்களது வாழ்க்கை, குறிப்பாக ஆரம்பக்கட்டங்களில் பொருளாதார ரீதியில் அவ்வளவு நன்றாக இருந்ததில்லை. ஆரம்பத்தில், அவர்கள் சிங்களவாடியிலும் புளியடிக்குடாவில் வாழ்ந்த காலங்கள் மிகவும் கடினமானவை. சாப்பாட்டுக்கே சிக்கல் நேர்ந்தகாலம். ஒரு துணை ஆசிரியராக குடும்பத்தை சமாளிக்க மாமா மிகவும் சிரமப்பட்டார். குறிப்பாக அது சிறிமாவோ ஆட்சிக்காலம். புளியடிக்குடா வீட்டில் அவர்கள் இருந்த காலங்களில் பாண் கிடைப்பதுகூட சிரமமாக இருந்த காலம். அப்போதுகூட கிடைக்கும் பாணில் தனது பிள்ளைகளுக்கு கால் றாத்தல் பாண் கொடுத்த மாமி, எனது வயிறு தாங்காது என்று எனக்கு மட்டும் அரை றாத்தல் கொடுத்தது இன்னும் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது.
ஆனால், அப்படியான வறுமைக்காலத்திலும் மாமாவின் பரோபகார குணத்தில் எந்த குறையும் கிடையாது. கொஞ்சம் பொறுப்பற்ற தன்மை என்று பலரும் பேசியதும் உண்டும். புகையிரத நிலைய வீதிக்கு மாறிவந்த பின்னர் கொஞ்சம் நிலைமை முன்னேறினாலும், தனது 9 பிள்ளைகளோடு சேர்த்து மாமா மேலும் ஒரு சில பிள்ளைகளையாவது வீட்டில் சேர்த்துக்கொள்வார். வீட்டில் என்ன இருக்கிறது, இருக்கிறதா, இல்லையா என்று எந்தச் சிந்தனையும் இல்லாமல், மாமா வீட்டுக்கு சாப்பாட்டுக்கு ஆளைச சேர்த்துக்கொள்வார். அவருக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை மாமி எப்படியாவது சமாளித்துவிடுவார் என்பதுதான்.
அந்த நம்பிக்கை நியாயமானதுதான். மாமியின் கைக்கு ஒரு ராசி இருக்கிறது. ஒரு பிடி இருந்தாலும் பல பிடி இருந்தாலும் அதனை எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் பகிரும் வல்லமை அந்தக் கைக்கு உண்டு. அவர் அள்ள அள்ள பானையில், சட்டியில் இருந்து வந்துகொண்டேயிருக்கும். எங்கிருந்துதான் வருகிறதோ தெரியாது அந்தக் கைக்கு அத்தனை ராசி. மணிமேகலையிடம் இருந்த அட்சய பாத்திரம் போல…
மட்டக்களப்பில் இருக்கும் ஆட்கள் போதாதென்று தான் சிறு வயதில் பணியாற்றிய மலையகத்தின் “பசறை” போன்ற பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களையும், தான் அதிபரான காலத்தில் இந்துக்கல்லூரியில் சேர்த்துவிடுவார் மாமா. அவர்களுக்கும் மாமிதான் எல்லாம். ஆனால், ஒரு நாளும் அவர் எந்த வகையிலும் முகம் சுருங்கியது கிடையாது.
அவர் வீட்டுக்கு ஒரு தடவை போய் வந்தவர் கூட அவரது சமயலைப் பேச மறந்தது கிடையாது. எனது நண்பர்கள், பரமேஸ்வரியின் நண்பர்கள், அவரது உறவினர்கள் என்று பலரும் இதில் அடக்கம்.
நான் என் விருப்பத்துக்கு திருமணம் செய்துவந்து நின்ற போது வீட்டிலும் உறவினர் மத்தியிலும் நிறைய எதிர்ப்பு. ஆனால், மாமி இது பற்றி எதுவும் சொன்னது கிடையாது. பரமேஸ்வரியை எந்த நிபந்தனையும் இல்லாமல் அரவணைத்தவர்களில் மாமியும் அடக்கம். அவர்கள் நெருக்கம் நேற்று வரை தொடர்ந்தது. எனது அம்மா மாமிக்கு நாத்தனார். நாத்தனார் உறவு கொஞ்சம் கடினமானது என்பது பொதுவான கருத்து. ஆரம்பத்தில் இவர்கள் மத்தியிலும் அப்படி இருந்திருக்கலாம். ஆனால், அம்மாவுக்கு மாமா குடும்பத்தின் மீது மிகுந்த பாசம் அதிகம். அதேபோல அம்மா கடைசியாக வாழ்ந்து முடிந்ததும் மாமியோடுதான்.
மாமியை கடைசியாக கடந்த மாதம் அவரது பிறந்த தினத்தின் போது சந்தித்தேன். அன்று அவர் எனது பிள்ளைகளோடு நிறைய களித்தார். அன்று என்னோடு அவ்வளவு பேச்சு இல்லை. அவருக்கு உடம்பும் முடியவில்லை. ஆனால், அதற்கு முதல்நாள் அருகில் இருந்து கொஞ்சம் பேசினார். நான் பேசியதில் அவருக்கு பாதி புரியவில்லை. ஏதாவது கேட்டால், அது புரியவில்லை என்றால், புன்முறுவல்தான் பதில்.
“முருகன் கோயிலுக்கு போனேன் மாமி” என்றேன்.
எங்கள் முருகன் கோயிலின் நிலை இப்போது அவ்வளவு நன்றாக இல்லை. அதனால், கோயில் எப்படி இருக்கிறது என்று மாமி கேட்டார்.
“முருகனுக்கு என்ன மாமி, அவர் அவரை பார்த்துக்கொள்வார்” என்று கேலியாக பதிலளித்தேன்.
எட்டி எனது கையை பிடித்துக்கொண்டு, “முருகனை கைவிட்டிராத மனே” என்றார். அதுதான் அவர் என்னோடு அழுத்தமாக பேசிய கடைசிவார்த்தை. முருகன் கையை பிடித்தால்தான் அவர் என்னை பார்த்துக்கொள்வார் என்று சொன்னாரா, அல்லது கைவிடப்பட்டிருக்கும் முருகனை(கோயிலை) பார்த்துக்கொள் என்றாரா?… இப்படி கொஞ்சமாக பேசினாலும், நம்மை அதிகம் யோசிக்க வைப்பதுபோலத்தான் மாமியின் பேச்சு இருக்கும்.
மட்டக்களப்பு மீன் என்றாலும், இறால் என்றாலும், ஆடு என்றாலும், கோழி என்றாலும், இல்லை வெறும் மரக்கறி என்றாலும் ஒருக்கா மாமியிட கையால சாப்பிட்டிரணும் என்பது எப்போதும் தீராத ஆசை.. அந்த வாவியில பிடிக்கிற சின்னச்சின்ன மீன்களை இனம் பார்க்காது ஒன்றாக சேர்த்து மாமி வைக்கும் குழம்புக்கு ஒரு சுவை இருக்கிறது. அது அந்த ஆற்று மீனின் சுவையா அல்லது மாமியின் கைப்பக்குவமா பிரித்துப்பார்ப்பது கடினம். அந்தப் புளி, உப்பு, உறைப்பு எல்லாம் எந்த அளவில் கலக்கிறது? இது ஒரு பெரிய சூத்திரம்.
2017 முதல் 2019 வரை அப்படி நிறைய சாப்பிட்டன். ஆனால், அது தின்னத்தின்ன தீராத ஆசை…இன்னும் இன்னும் கேட்கும் ஆசை… அந்தத் தட்டு நிறைந்த சோறும் கறியும் கண்முன் ஆடுகிறது. அதில் கொட்டிக்கிடத்த பாசம் நெஞ்சில் ஆடுகிறது.
என் மச்சாள்மாரும் தங்கைமாரும் அங்கு சாப்பாடு தருவார்கள்…. மட்டக்களப்பில் இன்னும் பல வீடுகளும் இருக்கின்றன. ஆனால், மாமி வீட்டுக்குப போய் உரிமையோடு, அவ்வளவு ஏன் கொஞ்சம் அதிகாரத்தோடு சாப்பிட்டது மாதிரி இனி கிடைக்குமா? “எனக்கு பசிக்கிறது” என்று உறுக்கி, கேட்டுச்சாப்பிட இனி இடம் இருக்காதுதானே… இனி மாமி வீடு என்று ஒன்று இருக்காதுதானே. எல்லாம் மற்றவங்க வீடுதானே..
மாமி நீங்க எங்கள் வீட்டில் வந்து பிறந்துவிடுங்கள்..















