AM Bank தாமன் மலூரி பாதுகாப்பு பணியாளர் சம்பவம்: MIC பிரிகேட் தலைவர் ஆண்ட்ரூ டேவிட் தரப்பில் விளக்கம்

திகதி: 27 நவம்பர் 2025, கோலாலம்பூர்

AM Bank தாமன் மலூரி பாதுகாப்பு பணியாளர் சம்பவம்: MIC பிரிகேட் தலைவர் ஆண்ட்ரூ டேவிட் தரப்பில் விளக்கம்

கோலாலம்பூர், நவ. 27 –

சமூக ஊடகங்களில் வைரலான “மக் சிக்” செக்யூரிட்டி மற்றும் ஒரு வீடற்ற நபர் சம்பவத்தைத் தொடர்ந்து, MIC தேசிய பிரிகேட் தலைவர் ஆண்ட்ரூ டேவிட் இன்று AmBank தாமன் மலூரி கிளைக்கு நேரடியாக சென்று கிளை மேலாளருடன் சந்தித்து விளக்கங்களை பெற்றார்.

சம்பவம் குறித்து பேசிய அவர், நேற்று வெளியான வீடியோவில் ‘மக் சிக்’ பாதுகாப்பு பணியாளர் ஒருவர் வீடற்ற நபரிடம் ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்டது சமூகத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.

வீடற்ற நபரின் நிலை மற்றும் பாதுகாப்பு பணியாளர் நடவடிக்கை

கிளை மேலாளர் வழங்கிய தகவல்படி, சம்பவத்திற்கு முன் அந்த வீடற்ற நபர் வங்கியின் வெளிப்புறத்தில் சிறுநீர் மற்றும் மலத்தை கழித்ததாகவும், அவர் மது போதையில் இருந்ததால் பாதுகாப்பு பணியாளரின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க இயலாமல் போனதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், பாதுகாப்பு பணியாளர் தண்ணீர் சிந்தி விரட்டியிருப்பது சரியான நடைமுறை அல்ல என்பதை ஆண்ட்ரூ டேவிட் வலியுறுத்தினார். பொதுமக்கள் அமைதியை பாதிக்கும் சூழலில் சரியான செயல்முறை அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் வழங்குதல் அவசியம் என அவர் தெரிவித்தார்.

தொழிலாளரின் உணர்ச்சி வசப்பட்ட நடவடிக்கை

சம்பவத்தில் இடம்பெற்ற செருப்பு பழுது பார்க்கும் தொழிலாளரின் தலையீட்டை குறிப்பிட்ட அவர்,

“யாருக்கும் தண்டனை வழங்கும் உரிமை இல்லை. இது உங்களின் வாழ்வாதார இடமாக இருந்தாலும், அதிகாரிகளிடம் முறையான புகார் அளிக்க வேண்டியது அவசியம்,”

என்று அறிவுறுத்தினார்.

AmBank தலைமையகத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கை

AmBank தாமன் மலூரி கிளை மேலாளர், வைரல் சம்பவத்திற்குப் பிறகு AmBank தலைமையகம் பல்வேறு உள்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து முழுமையான ஆய்வும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவத்தின் மீது உடனடி கவனம் செலுத்தி விளக்கமளித்த கிளை மேலாளருக்கு ஆண்ட்ரூ டேவிட் நன்றி தெரிவித்தார்.

மேலும், இந்தச் சம்பவத்தைப் பற்றி தகவல் வழங்கிய தனது குழுவினருக்கும் அவர் நன்றியைத் தெரிவித்தார்.

“எந்த வீடற்ற நபருக்கும் பாதுகாப்பு, தங்குமிடம் அல்லது மறுவாழ்வு தேவைப்பட்டால், எங்களைத் தொடர்பு கொள்ளலாம். நிச்சயமாக உதவ முடியும்,”

என்று அவர் உறுதியளித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *