18 நவம்பர் 2025 | கோலாலம்பூர்

ஆசியா பிராந்திய காமன்வெல்த் யூத் வொர்கர் விருதைப் பெற்ற மலேசிய இளைஞர் தலைவர் – எஸ். பாத்ம சீலன்
கோலாலம்பூர் – இன்டர்நேஷனல் யூத் சென்டர் (IYC) துணை இயக்குநர் எஸ். பாத்ம சீலன், 5வது உலக இளைஞர் பணியாளர் மாநாட்டின் போது வழங்கப்பட்ட 2025 ஆசியா பிராந்திய காமன்வெல்த் யூத் வொர்கர் விருது (மலேசியா) பெற்றுள்ளார். இளைஞர் மேம்பாட்டுத் துறையில் அவர் தொடர்ந்து ஆற்றிவரும் 25 ஆண்டுகால அர்ப்பணிப்பிற்கான உயரிய அங்கீகாரமாக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
எஸ். சீலன் தனது இளைஞர் சேவையை மலேசிய இந்திய இளைஞர் கவுன்சில் (MIYC) அமைப்பில் தன்னார்வலராக தொடங்கியார். பின்னர் அந்த அமைப்பில் பல்வேறு தலைமைப் பொறுப்புகளை வகித்து, உள்ளூர் மற்றும் சர்வதேச மட்டங்களில் பல இளைஞர் அமைப்புகளின் முக்கிய பதவிகளில் பணியாற்றினார். உலகளாவிய தளங்களில் மலேசியாவை பிரதிநிதித்துவப்படுத்தி, இளைஞர் பங்கேற்பு, திறன் வளர்ப்பு, வழிகாட்டுதல் மற்றும் இளைஞர் முன்னேற்ற முயற்சிகளில் முக்கியப் பங்காற்றினார்.
கடந்த 25 ஆண்டுகளில் நாடு முழுவதும் 50,000க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு தலைமைத்துவம், திறன் மேம்பாடு, சமாதான கட்டமைப்பு, தொழில் பயிற்சி மற்றும் சர்வதேச இளைஞர் பரிமாற்றங்கள் போன்ற திட்டங்கள் மூலம் அவர் வழிகாட்டி, வலுவூட்டியுள்ளார். இளைஞர் குரல்களை உயர்த்துதல், பங்கேற்பை ஊக்குவித்தல் மற்றும் நிலையான மாற்றத்தை உருவாக்கக்கூடிய இளம் தலைவர்களை உருவாக்குதல் ஆகியவை அவரது பணி மையமாக இருந்தன.
விருதைப் பெற்றதையடுத்து, எஸ். சீலன் நன்றி தெரிவித்து கூறினார்:
“இந்த விருது என் ஒன்றின் சாதனை அல்ல; MIYC, IYC மற்றும் எனது பயணத்தில் துணைநின்ற அனைத்து வழிகாட்டிகள், சகோதரர்கள் மற்றும் அமைப்புகளின் கூட்டுப்பணிக்கான அங்கீகாரம். ‘Passion, People, Purpose’ என்ற கொள்கைகளை அடிப்படையாக கொண்டு, இளைஞர்களை வலுவூட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன். இந்த விருதை மலேசியாவின் அனைத்து இளைஞர் பணியாளர்களுக்கும் அர்பணிக்கிறேன்.”
அவர் மேலும் கூறினார்:
“மலேசிய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகள் இளைஞர் பணியாளர்களின் பங்களிப்பை மேலும் மதித்து, ஆதரிக்க வேண்டும். 2026 ஜனவரி முதல் மலேசியாவில் இளைஞர் வயது வரம்பு 15–40 இலிருந்து 15–30 ஆக மாற்றப்படவுள்ள நிலையில், தற்போதைய இளைஞர் தலைவர்கள் இந்த புதிய சூழலில் தங்கள் பங்கினை வலுப்படுத்தத் தயாராக வேண்டும். வலுவான தலைமைத்துவம், முன்மாதிரி வழிகாட்டுதல் மற்றும் இளைஞர் பங்கேற்பை மேம்படுத்துவது நாட்டின் எதிர்கால மாற்றத்திற்கான முக்கிய அடித்தளம்.”
“இந்த விருது தனிப்பட்ட சாதனையை மட்டுமின்றி, மலேசியா மற்றும் ஆசியா பிராந்தியத்தில் இளைஞர் மேம்பாட்டை உருவாக்கும் கூட்டுப்பணியின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது.”
அவர் CAYWA இணைத் தலைவராக உள்ள மாண்புமிகு செனட்டர் டாக்டர் ஜூஃப்த்ரி ஜோஹா அவர்களுக்கு பரிந்துரைக்காகவும், விருது குழுவினருக்கு அங்கீகாரத்திற்காகவும், IYC இயக்குநர் டாக்டர் முகமது மாலிகி முகமது ரபீ அவர்களுக்கு அவரது வழிகாட்டுதலுக்காகவும் சிறப்பு நன்றி தெரிவித்தார்.















