சபா மாநில தேர்தல்; கெஅடிலான் சார்பாக 10 பேர் போட்டி – அன்வார் அறிவிப்பு

கோத்தா கினாபாலு, நவ 10-
சபா மாநில சட்டமன்ற தேர்தலில் பிரதமர் அன்வாரின் தலைமையிலான கெஅடிலான் கட்சி சார்பாக 10 பேர் போட்டியிடுகின்றனர்.
பிரதமரும் கெஅடிலான் கட்சி தலைவருமான டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த அறிவிப்பை நேற்றிரவு வெளியிட்டார்.
சபா மாநில கெஅடிலான் ஆலோசகரும் முன்னாள் நம்பிக்கை கூட்டணி தலைவரும் சபா கெஅடிலான் தலைவருமான கிறிஸ்டினா லியூ ஆப்பி-ஆப்பி மாநிலத் தொகுதியில் வேட்பாளராக இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மூன்று முறை மாநிலத் தொகுதியை வகித்த லியூ, அவருக்குப் பதிலாக தோனி சீ வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சபா மாநில ஆளுநர் மூசா அமானின் மூத்த மகனுமான யமானி ஹபீஸ் மூசா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
மேலும், முன்னாள் உள்துறை அமைச்சின் பொதுச் செயலாளர் ருஜி உபி மெரோடாய் மாநிலத் தொகுதியில் போட்டியிடுவார்.
அம்னோ, வாரிசனில் இருந்த முன்னாள் கெமாபோங் சட்டமன்ற உறுப்பினர் ஜமாவி ஜாபர் மெலாலாப் மாநிலத் தொகுதியில் வேட்பாளராக இருப்பார் என அவர் கூறினார்.
17ஆவது சபா மாநில சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் நவம்பர் 29ஆம் தேதி நடைபெறவுள்ளது. முன்கூட்டியே வாக்களிப்பு நவம்பர் 25ஆம் தேதி நடைபெறுகிறது.















