பாசீர் கூடாங் தமிழ்ப்பள்ளியின் உறவுகளின் தீப ஒளி கொண்டாட்டம்

பாசீர் கூடாங் தமிழ்ப்பள்ளியின் உறவுகளின் தீப ஒளி கொண்டாட்டம்

கடந்த 31.10.2025 ஆம் திகதி பாசீர் கூடாங் தமிழ்ப்பள்ளியின் தீபாவளி கொண்டாட்டம் பள்ளியின் ஆசிரியர் கழகத்தின் சார்பில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பள்ளியின் அழைப்பினை ஏற்று டத்தோ பாலமுரளி, இளங்கோ நற்பணி இயக்கத்தின் தலைவர் திரு. இளங்கோ, மாசாய் ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தின் தலைவர் திரு.சுப்பிரமணியம் கிருஷ்ணன் மற்றும் அவர்தம் செயலவை உறுப்பினர்கள், பள்ளியின் முன்னாள் மாணவர்கள், காக்கும் கரங்கள் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. ராமகிருஷ்ணன், பாசீர் கூடாங் கொங்கு அமைப்பின் செயலாளர் திரு.புனிதன், முன்னாள் தலைமையாசிரியர் திருமதி பழனியம்மாள், பள்ளியின் வாரியக்குழுத்தலைவர் திரு.சுகுமாறன், பள்ளியின் காற்பந்து விளையாட்டு பயிற்றுநர் திரு.அகி மற்றும் அவர்தம் குழுவினர் ,சாமி உணவக உரிமையாளர் திரு.சாமி என பலதரப்பட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டு இவ்விருந்துபசரிப்பைச் சிறப்பித்ததாகப் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி திலகவதி சக்கரபாணி அவர்கள் கூறினார்.

 

பள்ளியின் பற்பல ஆக்கப்பூர்வ முன்னெடுப்புகளுக்குப் பக்கபலமாக இருக்கும் நல்லுறவுகளின் அர்ப்பணிப்பைப் போற்றுவதோடு ஒரு குடும்பமாக இத்தீபத் திருநாளைக் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் உறவுகளின் தீப ஒளி கொண்டாட்டம் எனும் இவ்விழா பள்ளியில் ஆசிரியர் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டதாக தமது வரவேற்புரையில் குறிப்பிட்டார் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி திலகவதி சக்கரபாணி.

 

உடன் நின்று உதவிக்கரம் நீட்டிய அனைத்து நல்லுறவுகளுக்கும் நன்றி பாராட்டும் வகையில் விருந்தோம்பல் நடைபெற்றதோடு பள்ளியின் ஆசிரியர் கழகத்தின் சார்பில் அவர்களுக்கு அன்பளிப்பும் எடுத்து வழங்கப்பட்டது.

சிறப்பு வருகை புரிந்திருந்த ஐயா திரு.இளங்கோ அவர்கள் தமது உரையில் சுற்றுவட்டாரத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் பாசீர் கூடாங் தமிழ்ப்பள்ளி மிகச் சிறப்பாக இயங்கி வருவதாகவும் தமது இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்டுவரும் காக்குக் கரங்கள் வகுப்பில் பயிலும் மாணவர்கள் அனைத்துலக சாதனைகளை புரிந்து வருவது தமக்கு மன நிறைவைத் தருவதோடு இதர பள்ளிகளுக்கு இவர்கள் ஒரு முன்னுதாரணம் என்றும் குறிப்பிட்டார். அவ்வகையில் பாசீர் கூடாங் தமிழ்ப்பள்ளியின் மேம்பாட்டிற்கு தம்மால் ஆன உதவிகளைச் செய்ய நிச்சயம் தாம் தயாராக இருப்பதாக கூறினார்.

காதுக்கினிய கானங்களோடும் வருகையாளர்களின் அன்பு பாராட்டும் கலந்துரையாடலோடும் பாசீர் கூடாங் தமிழ்ப்பள்ளியின் உறவுகளின் தீப ஒளி கொண்டாட்டம் மிகச் சிறப்பாக நிறைவடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *