மலேசிய இந்தியர் மக்கள் கட்சிக்கு நான்தான் சட்டப்பூர்வ தலைவர்! புனிதன் உறுதிமொழி

பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 3:
மலேசிய இந்தியர் மக்கள் கட்சியின் தலைமைப் பொறுப்பைச் சுற்றி எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், “நான் தான் அந்தக் கட்சியின் சட்டப்பூர்வ தலைவர்” என புனிதன் உறுதியாக அறிவித்துள்ளார்.

சிலர், “புனிதன் கட்சியின் உறுப்பினர் பட்டியலில் கூட இல்லை” என குற்றஞ்சாட்டிய நிலையில், அவர் நேற்று பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற கட்சியின் தீபாவளி திறந்த இல்ல விழாவிற்கு பின் செய்தியாளர்களிடம் பதிலளித்தார்.
“நான் இந்தக் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருந்தே இன்று தலைவராகப் பதவி வகிக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்சியை வலுப்படுத்துவதில் முழுமையாக ஈடுபட்டுள்ளேன். தேர்தல் பிரச்சாரங்கள், தீபாவளி விழாக்கள், ஆண்டுக்கூட்டங்கள் என அனைத்தும் சீராக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. எனவே, நான் உறுப்பினரே இல்லை என கூறுபவர்கள் உண்மையை மறைக்க முயற்சிக்கின்றனர்,” என அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:“ அரசியல் நாயகர்களிடையே உருவாக்கப்படும் குழப்பமே தவிர, கட்சியின் உறுப்பினர்களிடையே எந்தப் பிரிவினையும் இல்லை. நாங்கள் ஒன்றுபட்ட அணியாகப் பணியாற்றி வருகிறோம். கட்சியின் நோக்கம் — இந்திய மக்களின் நலனுக்காக அரசியல் குரலாக இருப்பது தான்.”
புனிதன் மேலும் தெரிவித்ததாவது,எ ன்னை எதிர்த்து யாரேனும் சட்டரீதியான சவால் விடுத்தால் அதையும் நேர்மையாகச் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால் உண்மை ஒன்றே — நான் தான் மலேசிய இந்தியர் மக்கள் கட்சியின் சட்டப்பூர்வத் தலைவர். இதை யாராலும் மாற்ற முடியாது,” என்றார்.
பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற இவ்விழாவில் பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவர் டான் ஸ்ரீ மொகிதீன் யாசின், டத்தோ முக்ரிஸ் மகாதீர், டத்தோ ஸ்ரீ அஸ்மின் அலி, கெராக்கான் தலைவர் டாக்டர் டோமினிக் லாவ் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வின் போது பல மாநிலங்களிலிருந்தும் கட்சி கிளைத் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பெருமளவில் திரண்டிருந்தனர். தீபாவளி திறந்த இல்ல நிகழ்ச்சி நட்பு, ஒற்றுமை மற்றும் சமூக ஒத்துழைப்பை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.
கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து பேசும் போதும் புனிதன் கூறினார்:“ நமது அடுத்த இலக்கு — இந்திய சமூகத்தின் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் வாய்ப்புகள் ஆகிய துறைகளில் முன்னேற்றத்தை உறுதி செய்வது. அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவதற்கு எங்களது கட்சி முழு தயாரிப்புடன் உள்ளது.”
அவர் இறுதியாகச் சொன்னது:“
மக்கள் எங்களிடம் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கையை காப்பது எனது கடமை. அரசியல் வேறுபாடுகளை மீறி அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து சமூக நலனுக்காகப் பணியாற்ற வேண்டும்.”















