சட்டநடைமுறைகளைப் பின்பற்றிய பின்னரே, சிங்கப்பூரில் பன்னீர் செல்வம் தூக்கிலிடப்பட்டார்- உள்துறை அமைச்சு விளக்கம்

கோலாலம்பூர்: 3..10.2025
சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 38 வயதுடைய மலேசியரான பன்னீர் செல்வம் பரந்தாமன் அந்நாட்டின் அனைத்துச் சட்ட நடைமுறைகளையும் முழுமையாகப் பின்பற்றிய பின்னரே அக்டோபர் 8-ஆம் தேதி தூக்கிலிடப்பட்டதாக மலேசிய உள்துறை அமைச்சு நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
பன்னீர் செல்வம் தூக்கிலிடப்படுவதற்கு முன்பு, மலேசியக் காவல்துறை, சிங்கப்பூர் காவல்துறையின் அனுமதியுடன் செப்டம்பர் 27-ஆம் தேதி, அவர் குற்றம் சாட்டிய தனிநபர்கள் குறித்து விசாரணை நடத்தியது. எனினும், அந்த நபர்கள் மீது வழக்குத் தொடர போதுமான ஆதாரம் இல்லை என்று காவல்துறை முடிவெடுத்ததாக அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், பன்னீர் செல்வத்தை வேலைக்கு அமர்த்தியவர்கள் மீதான விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே அவர் தூக்கிலிடப்பட்டது குறித்து புக்கிட் கெலுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சு, மலேசியா பிற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாத கொள்கையைக் கடைப்பிடிப்பதாகவும், அந்நாடுகளின் இறையாண்மையை மதிப்பதாகவும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.















