நேபாளம், அக்டோபர் 30, 2025

நேபாளத்தின் எவரெஸ்ட் மலை அடிவார முகாமிற்கு அருகில் சிக்கிக் கொண்டிருந்த மலையேறிகளை மீட்கச் சென்ற ஒரு ஹெலிகாப்டர், கடுமையான பனிப்பொழிவினால் ஏற்பட்ட வானிலை சிக்கலினால் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது.
நேபாள பொது விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAN) வெளியிட்ட அறிக்கையில், ஹெலிகாப்டரின் விமானி உயிர் தப்பியிருப்பதாகவும், மலையேறிகள் மீட்கப்பட்டுள்ளதா என்பதில் இதுவரை உறுதியான தகவல் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து எவரெஸ்ட் மலையின் அடிவாரத்தில் உள்ள லுக்லா முகாமிற்கு அருகே நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. கடுமையான பனிப்பொழிவும் புயல் காற்றும் காரணமாக நேபாளம் மற்றும் சீனாவின் எவரெஸ்ட் பகுதிகள் புதன்கிழமை முதல் மூடப்பட்டிருந்தன. இதனால், மலையேற்ற மற்றும் மீட்பு நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
வானிலைத் துறை தெரிவிப்பின்படி, கடந்த சில நாட்களாக இமயமலைப் பகுதிகளில் அசாதாரணமான பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்று வீசுவதால், வான்வழி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல சுற்றுலாப் பயணிகளும் மலையேற்றக் குழுக்களும் முகாம்களில் சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசு அதிகாரிகள், மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், வானிலை சீராகும் வரை மேலதிக பறப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினர்.
– மலேசிய கலை உலகம் (MKU) செய்தி, 30.10.2025















