ASEAN இளைஞர் உச்சிமாநாடு 2025 மலேசியாவில்: எதிர்கால தொழிலாளர் திறன்களை மேம்படுத்தல் முக்கிய நோக்கம்
கோலாலம்பூர், அக்டோபர் 23, 2025 –
மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற ASEAN இளைஞர் உச்சிமாநாடு (ASEAN Youth Outlook Summit – AYOS 2025), தென்கிழக்கு ஆசிய நாடுகளின் இளைஞர்களை ஒன்றிணைத்து, எதிர்கால தொழிலாளர் சக்தியை உருவாக்குவது மற்றும் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவது என்பதை மையக்கருவாகக் கொண்டது.
இந்த மாநாட்டில் மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து இளைஞர் பிரதிநிதிகள், கல்வி, தொழில்நுட்பம் மற்றும் தொழில் துறைகளில் இளைஞர்களின் பங்களிப்பு குறித்து விவாதங்களில் ஈடுபட்டனர்.
மலேசிய பிரதமர் டத்தோ’ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது தொடக்க உரையில், தொழில் துறைகள் விரைவாக மாறி வரும் இக்காலத்தில், இளைஞர்கள் புதிய திறன்களை கற்றுக்கொள்வது மிக முக்கியம் என வலியுறுத்தினார்.
“இளைஞர்கள்தான் நம் நாட்டின் மற்றும் ASEAN பிராந்தியத்தின் எதிர்காலம். அவர்களுக்கு தரமான கல்வியும் தொழில்நுட்பப் பயிற்சியும் வழங்கப்பட வேண்டும். அதனால் மட்டுமே நாம் உலகளவில் போட்டியிட முடியும்,” என அவர் தெரிவித்தார்.
மாநாட்டில் பேசுபவர்கள், செயற்கை நுண்ணறிவு (AI), டிஜிட்டல் பொருளாதாரம், மற்றும் பசுமை தொழில் (Green Industry) போன்ற துறைகள் எதிர்கால வேலைவாய்ப்புகளில் முக்கிய பங்காற்றும் என்பதை குறிப்பிடினர். இளைஞர்கள் இந்த துறைகளில் ஆர்வம் காட்டி தங்களின் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
AYOS 2025, இளைஞர்களுக்கு தங்கள் கருத்துகள், புதுமைகள் மற்றும் சமூக பங்களிப்புகளை பகிரும் வலுவான தளமாக அமைந்தது. இந்த நிகழ்வு, ASEAN நாடுகளின் இளைஞர் ஒற்றுமையை வலுப்படுத்தும் முக்கியமான முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.















