2026 வரவுச் செலவுத் திட்டம், இந்தியர்களின் நலனை அரசாங்கம் புறக்கணிக்கவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது: பாப்பா ராய்டு

2026 வரவுச் செலவுத் திட்டம், இந்தியர்களின் நலனை அரசாங்கம் புறக்கணிக்கவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது: பாப்பா ராய்டு

ஷா ஆலம், அக்டோபர் 10:

2026-ஆம் ஆண்டுக்கான வரவு–செலவு திட்டம், இந்திய சமூகத்தின் நலனை உறுதிசெய்யும் வகையில் மடானி அரசாங்கம் எடுத்துள்ள இன்னொரு வலுவான அடியாகும் என்று சிலாங்கூர் மாநில மனிதவள மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பா ராய்டு தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:
“மடானி அரசாங்கம் சமூகநீதியும் பொருளாதார சமநிலையும் கொண்ட நாட்டை உருவாக்கும் நோக்கில் தொடர்ந்து செயல்படுகிறது. இதன் பிரத்யேக சான்றாக, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 18 முதல் வழங்கப்படவுள்ள எஸ்டிஆர் (STR) நிதி உதவித் தொகை அமைகிறது. இது, பெருநாள் காலத்தில் மக்களின் நிதிச்சுமையை குறைக்கும் முக்கிய தீர்வாகும்.”

அதேபோல், தீபாவளி பண்டிகையையொட்டி இரண்டு நாட்களுக்கு 50 விழுக்காடு டோல் கட்டண தள்ளுபடி அறிவித்திருப்பது, குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யும் மக்களுக்கு பெரும் நிம்மதியைக் கொடுக்கும் எனவும் அவர் கூறினார்.

பாப்பா ராய்டு மேலும் தெரிவித்ததாவது:
“அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள RM100 சாரா (SARA) உதவித் தொகை வாழ்க்கைச் செலவுகள் அதிகரிக்கும் சூழலில் மக்களின் தேவைகளை சமாளிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசாங்கம் தனது மக்களின் நலனில் எவ்வளவு உறுதியாக செயல்படுகிறது என்பதைக் காட்டுகிறது.”

அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக, இந்திய சமூகத்திற்கான STR மற்றும் SARA ஒதுக்கீடுகள் RM600 மில்லியனிலிருந்து RM1 பில்லியனாக உயர்த்தப்பட்டுள்ளன. “இது குறைந்த வருமானம் பெறும் இந்தியக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை நேரடியாக மேம்படுத்தும் நடவடிக்கையாகும்,” என அவர் வலியுறுத்தினார்.

அதுடன், “Vanakam MADANI – Deepavali Food Basket” எனப்படும் திட்டத்தின் கீழ், குறைந்த வருமானம் பெறும் இந்தியக் குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுவதாகவும், இது அரசாங்கத்தின் சமூக அக்கறையின் வெளிப்பாடாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இறுதியாக, “இந்த அனைத்து முயற்சிகளும் இந்திய சமூகத்தின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் புதிய பாதையைத் திறக்கும். பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம், இந்தியர்கள் நாட்டின் முன்னேற்றப் பயணத்தில் பின்தங்காமல் இருப்பதை உறுதிசெய்துள்ளது. இதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று வீ. பாப்பா ராய்டு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *