புடி95 மானியத் திட்டம்: இ-ஹெய்லிங் சேவைக்குக் கூடுதல் கோட்டா விரைவில் அறிமுகம்

புத்ராஜெயா:02.10.25
RON95 பெட்ரோலுக்கான BUDI95மானியத் திட்டத்தின் மேம்பாட்டின் ஒரு பகுதியாக, இ-ஹெய்லிங் (e-hailing) சேவைக்குக் கூடுதல் கோட்டா (Quota) விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்துப் பேசிய பொருளாதார அமைச்சகத்தின் தலைமைச் செயலாளர் டத்தோ நார் அஸ்மி டிரோன், இந்தக் கூடுதல் கோட்டா குறித்த ஆய்வு தற்போது நடைபெற்று வருவதாகவும், அதன் அளவு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
“இ-ஹெய்லிங் சேவைக்கான கூடுதல் கோட்டா, அரசாங்கத்தின் முடிவைப் பொறுத்து அறிவிக்கப்படும். 2026-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின்போது (Belanjawan 2026) இது அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது,” என்று தெரிவித்தார்.
பள்ளி செயல்பாட்டுத் துறைத் துணைப் பொது இயக்குநர் சைய்னல் அபாஸ் மற்றும் ஒலிபரப்புத் துறை தலைமை இயக்குநர் டத்தோ சுகைமி சுலைமான் ஆகியோரும் இந்நிகழ்வில் உடனிருந்தனர்.
முன்னதாக நேற்று, முழுநேர இ-ஹெய்லிங் ஓட்டுநர்களுக்கு அக்டோபர் 15-ஆம் தேதி முதல் கூடுதல் புடி95 மானியத் தகுதியை வழங்க அரசாங்கம் ஒப்புக்கொண்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும், இந்தக் கூடுதல் மானியத்திற்கான விண்ணப்பங்கள் இ-ஹெய்லிங் ஆப்பரேட்டர் நிறுவனங்கள் (EHO) மூலம் குழுவாகச் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.















