- இந்து ஆலயங்களுக்கு தலா வெ 20,000: தர்ம மடானி திட்டத்தின் அசல் நோக்கத்துக்கு ஏற்புடையதல்ல!

கோலாலம்பூர் செப் 29.2025
நாட்டில் உள்ள இந்து ஆலயங்களுக்கு தலா வெ 20,000 “ஒன்-ஆஃப்”(one-off) நிதி உதவி பரிந்துரை தர்ம மடானி திட்டத்தின் அசல் நோக்கத்துக்கு ஏற்புடையதல்ல என மலேசிய இந்து சங்க தலைவர் தங்க கணேசன் தெளிவுபடுத்தினார்.
இந்த பரிந்துரை தர்ம மடானி திட்டத்தின் அமலாக்கத்தை கவனிக்கும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் செயல்படும் செயல் குழுவில் விவாதிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டு விட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த விவகாரத்தில் திட்டக் குழுவின் நிலைப்பாடு உறுதியானது என்றார் அவர்.
தர்ம மடானி திட்டம் என்பது மலேசிய இந்த சங்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு துறை அமைச்சு இணைந்து நடத்திய தேசிய ஆலய மாநாடு விளைவாக உருவானது என அவர் சொன்னார்.
அந்த மாநாட்டில் இந்திய சமூகம் எதிர்நோக்கி வரும் பல்வேறு சவால்கள் முன்வைக்கப்பட்டதோடு, அவற்றை சமாளிக்க ஆலயங்களின் பங்கு குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
அந்த மாநாட்டில் ஆலயங்கள் வெறும் வழிபாட்டுத்தலங்கள் மட்டுமல்லாமல் சமூக சேவை மையங்களாக இயங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மேலும் அரசாங்கத்தின் திட்டங்கள் மற்றும் தகவல்கள் மக்களிடம் கொண்டு செல்லும் தளமாகவும் ஆலயங்கள் விளங்க வேண்டும் என விரிவாக பேசப்பட்டது.
இந்த அணுகுமுறை அனைவரையும் உள்ளடக்கிய முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்ட மடானி அரசு திட்டத்துடன் ஒத்துப் போகிறது.
ஒரு மத அமைப்பால் முன்வைக்கப்பட்ட தொலைநோக்கு முயற்சியை அரசு ஏற்று, அதை செயல்படுத்த நடவடிக்கை எடுப்பது இதுவே முதல் முறை
இது சமூகத்தின் குரலுக்கு அரசு செவி சாய்த்ததையும் மத அமைப்புகளின் பங்களிப்பை மதிப்பதையும் காட்டுகிறது.
தேசிய ஆலய மாநாட்டில் மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அவை பின்னர் பரிசு அளிக்கப்பட்டு 8 தீர்மானங்களாக சுருக்கப்பட்டது. இவை இவ்வாண்டு மார்ச் மாதத்தில் அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அமைச்சரவை, இந்திய சமூகத்தின் முன்னேற்றத்தை உறுதி செய்யும் நோக்கத்தில், அவற்றை நிறைவேற்ற MITRA நிதியை பயன்படுத்த ஒப்புதல் வழங்கியது.
மொத்தம் 20 மில்லியன் நிதி 200 ஆலயங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிவிப்பை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, தர்ம மடானி திட்டம் என்பது தேசிய ஆலயங்கள் மாநாட்டில் உருவான ஒரு முக்கிய முயற்சியாகும். அது தேசிய ஒருமைப்பாட்டு துறை அமைச்சால் அமைச்சரவை நிலைக்கு கொண்டு செல்லப்பட்டு, தற்போது MITRA நிதியின் மூலம் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் கட்டத்தை எட்டியுள்ளது. தர்மம் மடானி திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் தேசிய ஒருமைப்பாட்டு துறை அமைச்சால் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளன. விண்ணப்ப படிவங்கள் அங்கீகரிக்கப்பட்டு நாடு முழுவதும் உள்ள ஆலயங்களுக்கு விநியோகிக்க தயாராக உள்ளன.
ஆகையால் ஊடகங்களில் ஏற்பட்ட குழப்பத்தை தெளிவுபடுத்தவும் நாடு முழுவதும் உள்ள ஆலயங்களில் நிர்வாகிகளுக்கு தர்ம மடானி திட்டம் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் என தங்க கணேசன் தமது அறிக்கையில் தெளிவுப்படுத்தினார்.
#mhsnational















