பெட்ரோல் மானியத் திட்டம் BUDI95 சுமூகமாக அமல்: உள்துறை அமைச்சர் உறுதி

பெட்ரோல் மானியத் திட்டம் BUDI95 சுமூகமாக அமல்: உள்துறை அமைச்சர் உறுதி

கோலாலம்பூர்:செப்டம்பர் 30. 2025


இன்று முதல் அமலுக்கு வந்துள்ள RON95 பெட்ரோலுக்கான BUDI95 மானியத் திட்டம் சுமூகமாகச் செயல்பட்டு வருவதாக உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட கண்காணிப்பில் எந்தவிதமான சிக்கல்களும் கண்டறியப்படவில்லை என்றும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.

உள்துறை அமைச்சின் செப்டம்பர் மாத மாதாந்திரக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர், “இன்று எரிபொருள் நிரப்பும் நிலையங்கள், குறிப்பாக உச்ச நேரங்களில், அதிகச் சுறுசுறுப்புடன் இயங்குகின்றன. இது திடீரென நிகழ்ந்தது அல்ல, ஒழுங்கமைக்கப்பட்ட திட்டமிடலின் விளைவாகும். MyKad எனும் அடையாள அட்டை பயன்படுத்திப் பெட்ரோல் வாங்கும் முறையை கவுண்டரில் மட்டுமின்றி, நேரடியாகப் பெட்ரோல் நிரப்பும் பம்புகளிலும் செயல்படுத்த முடிந்ததே இந்த மாபெரும் வெற்றிக்குக் காரணமாகும்,” என்று கூறினார்.

இந்த மானியத் திட்டத்தின் செயல்முறையை எளிதாக்குவதற்காக, நாடு முழுவதும் உள்ள 4,000 எரிபொருள் நிலையங்களின் அமைப்புகளை மேம்படுத்த, தேசியப் பதிவுத் துறை களத்தில் இறங்கி உதவியதாக அமைச்சர் சைஃபுதீன் தெரிவித்தார்.

முன்னதாக, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், வருமான வரம்பைப் பொருட்படுத்தாமல், மலேசியக் குடிமக்கள் BUDI95 திட்டத்தின் மூலம் இன்று முதல் ஒரு லிட்டர் RON95 பெட்ரோலை RM2.05-க்கு பதிலாக RM1.99 விலையில் பெறலாம் என்று அறிவித்திருந்தார்.

இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மலேசியக் குடிமகனுக்கும் மாதத்திற்கு 300 லிட்டர் வரை RON95 பெட்ரோலை மானிய விலையில் பெறும் தகுதி வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம், வெளிநாட்டவர்களுக்கு RON95 பெட்ரோலின் விலை அதே தேதியிலிருந்து ஒரு லிட்டர் RM2.60 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

📰 செய்தி: வீர சின்னையன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *