லங்காவியில் பாராசெய்லிங் நடவடிக்கையின் போது விபத்து: எண்மர் பாதிப்பு
லங்காவி: 28.09.2025
லங்காவி கடற்கரையில் பாராசெய்லிங் (parasailing) நடவடிக்கையின் போது சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் எட்டு சுற்றுலாப் பயணிகள் காயமடைந்தனர்.
நேற்று நண்பகல் 1.15 மணியளவில் Pantai Tengah-இல் படகு கவிழ்ந்த சம்பவம் குறித்த தகவல் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டதாக லங்காவி துணை காவல் துறைத் தலைவர் சுப்ரின்டென்டன்ட் சம்சுல்முடின் சுலைமான் (Supt Samsulmuddin Sulaiman) தெரிவித்தார்.
“அந்தப் படகில் ஆறு சுற்றுலாப் பயணிகள் – மூன்று வயது வந்த ஆண்கள், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு சிறுவன் – அத்துடன் இரண்டு படகு ஊழியர்கள் இருந்தனர். சம்பவத்தின் போது, சுற்றுலாப் பயணிகளில் ஒருவர் பாராசெய்லிங் செய்து கொண்டிருந்தார்,
ஆனால் அவர் பத்திரமாக கீழே கொண்டு வரப்பட்டார். பலத்த காற்றின் காரணமாகவே இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்றும், விபத்து நடந்த இடத்தில் இருந்த பொதுமக்களால் பாதிக்கப்பட்ட அனைவரும் மீட்கப்பட்டனர்” என்றும் அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
ஆரம்பத் தகவல்களின் அடிப்படையில், யாரும் படுகாயம் அடையவில்லை என்றும், அனைவரும் சுல்தானா மாலிஹா மருத்துவமனையில் (Sultanah Maliha Hospital) சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
















