MITRAவின் கீழ் ஐந்து முக்கிய திட்டங்கள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன; பி40 பிரிவைச் சேர்ந்த இந்திய சமூகத்தை மேம்படுத்தும் 

MITRAவின் கீழ் ஐந்து முக்கிய திட்டங்கள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன; பி40 பிரிவைச் சேர்ந்த இந்திய சமூகத்தை மேம்படுத்தும்

கோலாலம்பூர்: செப்டம்பர் 26 ஆம் தேதி

மலேசிய இந்தியர் உருமாற்று பிரிவான MITRA கீழ், பி40 பிரிவைச் சேர்ந்த இந்திய சமூகத்தை மேம்படுத்தும் நோக்குடன் தயாரிக்கப்பட்ட ஐந்து முக்கிய திட்டங்கள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன என்று தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துறை துணை அமைச்சர் டத்தோசிரி ஆர். ரமணன் அறிவித்தார்.

 

இந்தத் திட்டங்கள் அனைத்தும் தொடங்க தயாராக உள்ளன என்று பல அரசு நிறுவனங்களின் பங்கேற்புடன் நடந்த மித்ரா கூட்டத்திற்குப் பின் அவர் தெரிவித்தார். இந்த முக்கிய முயற்சிகளில், முதலாவதாக, கிராமப்புற மேம்பாட்டுத் துறை வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் முப்பத்தி மூன்று மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன; இதில் இருபத்தொன்று இந்திய பாரம்பரிய கிராமங்கள் வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும்.

 

இரண்டாவதாக, கல்வி அமைச்சகத்தின் யாயாசான் DIDIK அறக்கட்டளை மூலம், தமிழ்ப்பள்ளிகளுக்குத் தேவையின் அடிப்படையில் சுமார் நானுறு ஸ்மார்ட் பலகைகள் வழங்கப்படும்.

 

மூன்றாவதாக, பிரதமரால் அறிவிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான வீடுகள் பழுதுபார்க்கும் திட்டம் குறித்து தோட்ட மற்றும் பொருள்கள் அமைச்சகம், நிதி அமைச்சகம் மற்றும் என்யுபி டபல்யு உள்ளிட்ட நிறுவனங்களுடன் விரிவான விவாதங்கள் நடத்தப்பட்டன.

 

நான்காவதாக, இந்திய சமூகம் பயன்பெறும் வகையில், சுமார் ஆயிரம் கோவில்களுக்குத் தலா இருபதாயிரம் ரிங்கிட் நிதி உதவி வழங்கப்படும், இதற்கான விண்ணப்பங்கள் விரைவில் திறக்கப்படும். ஐந்தாவதாக, பொது மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு உயர்கல்வி நிதி உதவி வழங்கப்படும், இதற்கான விண்ணப்பங்கள் பிரதமரின் ஒப்புதலுக்குப் பிறகு தொடங்கப்படும்.

 

மேலும், ‘மீண்டும் பள்ளிக்கு’ நிதி உதவித் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டாலும், இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும், இந்திய சமூகத்தின் நலனுக்கான பல திட்டங்களை அரசாங்கம் உறுதியாகச் செயல்படுத்தும் என்றும் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *